தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிபுலிகள் நாளை இந்தியா வருகை

புதுடெல்லி: இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிவிங்கிபுலிகள் இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து அவற்றை மீண்டும் இந்தியாவில் அறிமுகம்  செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிபுலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டன.

இவற்றை பிரதமர் மோடி தனது 72வது பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மத்தியப்பிரதேசத்தின் குனோ தேசியப்பூங்காவில் திறந்துவிட்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் தொடர்ச்சியாக நாளை மேலும் 12 சிவிங்கிபுலிகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறுகையில்,‘‘தற்போது 8 சிவிங்கிபுலிகள் குனோ பூங்காவில் உள்ளன. அவை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் இருந்து ேமலும் 12 சிவிங்கிபுலிகள் 18ம் தேதி(நாளை) இந்தியா கொண்டு வரப்படவுள்ளன” என்றார்.

Related Stories: