×

ரூ.35 ஆயிரத்தை இழந்த இளம்பெண் புகார்: ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களை குறி வைத்து நூதன மோசடி: மேற்குவங்க இளைஞர்கள் கைது

பெரம்பூர்: ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களை பின்தொடர்ந்து அவர்களுக்கே தெரியாமல், நூதன முறையில் அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சென்னை பெரவள்ளூர் லோகோ ஸ்கீம் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், ஆன்லைன் மூலம் மாதம் மாதம் அழகு சாதன பொருட்களை வாங்கி வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த வருடம் டிசம்பர் 20ம்தேதி, இந்த பெண்ணிற்கு அறிமுகம் இல்லாத ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘‘நீங்கள் மாதாமாதம் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். எங்களது ஆன்லைன் ஷாப்பிங்கில் தொடர்ந்து  பொருட்கள் வாங்கியதால், உங்களுக்கு லேப்டாப், பிரிட்ஜ், கலர் டிவி, ஐபோன் உள்ளிட்ட 5 பொருட்கள் பரிசாக கிடைத்துள்ளது.

இதில், ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு 5027 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்’’ என்றார். இதை நம்பிய அந்த பெண் ₹5 ஆயிரத்துக்கு விலை மதிப்புமிக்க பொருள் கிடைக்கிறது என்று நம்பி, லேப்டாப்பை தேர்வு செய்து, பணத்தை ஆன்லைன் மூலம் கட்டியுள்ளார். பணம் கட்டிய சில நிமிடங்களில், அந்த நபர் மலரை தொடர்பு கொண்டு, நீங்கள் ஆடர் செய்த பொருளை அனுப்புவதற்கு, இன்சூரன்ஸ் செய்ய, 15,490 பணம் கட்ட வேண்டும் எனவும், அந்த பணம் உங்களுக்கு திரும்பி வந்துவிடும் என்றும் கூறியுள்ளார். இதனால், பணம் திரும்பி வந்துவிடும் என்ற எண்ணத்தில், அந்த பெண் பணத்தை கட்டியுள்ளார்.

கட்டிய சில நிமிடங்களில், அந்த நபர் மீண்டும் தொடர்பு கொண்டு, பணம் வந்து சேரவில்லை கூடுதலாக ஐந்து பைசா சேர்த்து கட்டுங்கள் வருகிறதா என்று பார்ப்போம் என்றார். இதனால், பணம் திரும்பி வந்துவிடும் என்ற எண்ணத்தில், அந்த பெண் மீண்டும் 15,490 ரூபாய் பணம் கட்டினார். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர் மீண்டும் பணம் வரவில்லை எனக் கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த பெண் பணம் கட்டுவதை நிறுத்திவிட்டு, தனது தந்தையிடம் நடந்ததை கூறிவிட்டு, அந்த நபரை தொடர்பு கொண்டபோது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, இதுகுறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், கொளத்தூர் சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனை வில்லிவாக்கம் உதவி ஆணையர் ராகவேந்திர ரவி தலைமையில், சைபர் க்ரைம் போலீசார்  வழக்கு விசாரிக்கப்பட்டது.

விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மேற்குவங்கத்தை சேர்ந்த நபர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, செல்போன் டவர் லொக்கேஷன் மற்றும் ஏமாற்றியவர்களின் வங்கி கணக்கு, அவரது மெயில் ஐடியை வைத்து, நேற்று முன்தினம் சைபர் க்ரைம் போலீசார் மேற்குவங்கம் சென்றனர். அப்போது, மேற்குவங்கம் வடக்கு பரக்பூர் இந்திர பூரி பகுதியை சேர்ந்த பிபுல் மலாக்கர் (22), அதே பகுதியை சேர்ந்த கவுஷிக் மண்டால் (22) ஆகிய 2 பேரும், ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சைபர் க்ரைம் போலீசார் 2 பேரையும் கைது செய்து, சென்னை அழைத்து வந்து, அவர்களை எழும்பூர் 5வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : West Bengal , Teen complains of losing ₹35,000: Online fraud targeting people buying goods: West Bengal youth arrested
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை