×

புளியந்தோப்பு, கொடுங்கையூரில் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள் நெரிசலில் திண்டாடும் வாகனங்கள்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

பெரம்பூர்: புளியந்தோப்பு, கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து உள்ள கடைகள் மற்றும் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால்  தினமும் நெரிசலில் வாகன ஓட்டிகள் திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது. மருத்துவமனை, அவசர பணிகளுக்கு கூட உடனே செல்ல முடியாமல் பல மணி நேரம்  தவிக்கும் நிலைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் சாலை ஆக்கிரமிப்புகள் மற்றும் கடைகள் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் பிரியாணி கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில பிரியாணி கடைகள் இரவு முழுவதும் இயங்கி வருகின்றன. ஏற்கனவே, இந்த சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நாட்கள் கழித்து பணிகள் முடிக்கப்பட்டன.

தற்பொழுது, இந்த சாலையில் உள்ள பிரியாணி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையின் இரண்டு பக்கமும் வாகனத்தை விட்டு செல்வதால், சாலை மிகவும் குறுகி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பிரியாணி கடை மற்றும் பல்வேறு கடைகளின் பொருட்கள் சாலைகளில் வைக்கப்படுவதால், சாலை ஓரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் நடுரோட்டில் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையின் வழியாக புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பேசின்பிரிட்ஜ் வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து, பலமுறை புளியந்தோப்பு போக்குவரத்து போலீசாருக்கு புகார் அளித்தும், அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்டையார்பேட்டை 4வது மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பகுதியில் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலை உள்ளிட்ட சாலைகள் வழியாக தினமும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. மணலி சாலை வழியாக தனியார் கல்லூரி மற்றும் சின்னாண்டி மடம் பகுதியை சுற்றி ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால், மணலி சாலை வழியாக காலை, மாலை நேரத்தில் கல்லூரி மாணவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். மேலும், பள்ளிகளுக்கு காலை மற்றும் மாலை வேளையில் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பல்வேறு ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பெற்றோர்களும் அந்த வழியாக செல்கின்றனர்.

சின்னாண்டி மடம், மணலி சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் பல்வேறு வெல்டிங் கடைகள், துரித உணவகங்கள் போன்ற பல்வேறு கடைகள் சாலைகளை ஆக்கிரமித்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, வெல்டிங் கடைகளுக்கு வெளியே ஆட்டோக்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்கள் சாலையில் கிடப்பதால், சாலை ஓரத்தில் செல்லும் இருசக்கர வாகனங்கள் நடுரோட்டில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், கனரக வாகனங்கள் மெதுவாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அந்த இடத்தை சுற்றிலும் பல்வேறு சிறிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

அந்த தொழிற்சாலைகளுக்கு சரக்கு இறக்குவதற்காக பல்வேறு லாரிகள் தினமும் வந்து செல்வதால், காலை வேளையில் லாரிகள் வரும்போது கடும் போக்குவரத்து நெரிசலால், பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை மற்றும் மாலை இரு வேளைகளும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, புளியந்தோப்பு மற்றும் கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில் சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றி, போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodungaiyur ,Pulianthoppu , Shops encroaching on roads in Pulianthoppu, Kodunkaiyur, vehicles snarling in traffic: Urge to find permanent solution
× RELATED வேறொரு பெண்ணுடன் தொடர்பால் தூங்கிய கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி