பரமக்குடி பெண் பலாத்கார வழக்கு; வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வாலிபர் 7 ஆண்டுக்கு பின் கைது: சென்னை விமான நிலையத்தில் அதிரடி

மீனம்பாக்கம்: பரமக்குடியில் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு 7 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த வாலிபர், ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்தில் சிக்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் பூமாரி (30). இவர், கடந்த 2016ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், பரமக்குடி போலீஸ் நிலையத்தில் 2016 மார்ச் மாதம் பூமாரி மீது, பாலியல் பலாத்கார புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூமாரியை கைது செய்ய தீவிரமாக தேடினர். ஆனால், அவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு பூமாரி தப்பி சென்று விட்டார் என்ற தகவல், பரமக்குடி போலீசாருக்கு கிடைத்தது.

இதை தொடர்ந்து, இந்த வழக்கு பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின்பு பூமாரியை வெளிநாட்டில் கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பூமாரியை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து விமான நிலையங்களிலும் எல்ஓசியும் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

இந்த விமானத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளியான பூமாரி, சென்னை வந்தார். சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. அனைவரும் அதை மறந்து இருப்பார்கள். இனிமேல் போலீஸ் நம்மை பிடிக்காது என்ற நினைப்பில் சென்னை வந்து, சொந்த ஊர் செல்வதற்காக இருந்தார். ஆனால், குடியுரிமை அதிகாரிகள் பூமாரியின் பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த போது, பாலியல் பலாத்கார வழக்கில் ராமநாதபுரம் போலீசாரால் கடந்த 7 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்று, கம்ப்யூட்டரில் காட்டியது.

இதையடுத்து பூமாரியை வெளியில் விடாமல், குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அப்போது பூமாரி, இது பழைய வழக்கு. இந்த வழக்கு முடிந்துவிட்டது என்று கூறி தப்பிக்க முயன்றார். ஆனால் குடியுரிமை அதிகாரிகள், பூமாரியை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்து, பூமாரிக்கு காவலுக்கு போலீசையும்  நியமித்தனர். அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 7 ஆண்டு தலைமறைவு குற்றவாளி, ஓமன் நாட்டில் இருந்து வந்த போது, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார் என்ற தகவலையும் கொடுத்தனர். இதையடுத்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை போலீசார், பூமாரியை அழைத்துச்செல்ல சென்னை வந்தனர்.

Related Stories: