×

200 சவரனுடன் உரிமையாளர் ஓட்டம்: பெரம்பூர் அடகு கடையில் பெண்கள் முற்றுகை, மறியல்

பெரம்பூர்: பெரம்பூர் அகரம் தான்தோன்றி அம்மன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கோவிந்த ராம் (38). இவர் அதே பகுதியில் பிரேமா தேவி பான் புரோக்கர்ஸ் என்ற பெயரில் கடந்த 5 வருடங்களாக அடகு கடை நடத்தி வந்தார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். கடந்த 15 நாட்களுக்கு முன்பு நகைகளை அடகு வைத்த நபர்கள், நகைகளை மீட்க வந்த போது, கோவிந்த ராம், நகைகள் வங்கியில் உள்ளது. 10 நாள் கழித்து வாருங்கள் எனக் கூறி அனைவரையும் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி அடகு வைத்த நபர்கள் கடைக்கு சென்று பார்த்தபோது கடையை பூட்டிவிட்டு கோவிந்த ராம் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சுமார் 200 சவரன் நகைகள் மற்றும் 25 லட்ச ரூபாய் பணத்துடன் கோவிந்த ராம் தலைமறைவானது தெரிய வந்தது. 10க்கும் மேற்பட்டோர் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்து பல நாட்கள் ஆகியும் செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று மாலை சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் அடகு கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்து செம்பியம் போலீசார் மற்றும் பெரவள்ளூர் போலீசார் அங்கு சென்று  பெண்களை சமாதானம் செய்தனர். மேலும் 100 சவரன் நகைக்கு மேல் சென்று விட்டதால் வழக்கை மத்திய பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றிவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர்கள், அங்கு சென்று முறையிட கூறியும் அனுப்பி வைத்தனர்.


Tags : Savaran ,Perambur ,Pawnshop , 200 Owners run with Savaran: Women blockade, picket at Perambur Pawnshop
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது