மேலூரை சேர்ந்த இளம் தொழிலதிபர் கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமனம்

மேலூர்: மேலூரை சேர்ந்த இளம் தொழில் அதிபர் அருண்ராஜா பெரியசாமி, இந்திய-ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலில், கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டை சேர்ந்த கிரானைட் தொழில் அதிபர் பெரியசாமியின் மகன் அருண்ராஜா பெரியசாமி. இளம் வயதில் இருந்தே தந்தையின் தொழிலை பார்த்து வளர்ந்து வந்த, இவர் தன் கடும் முயற்சியால், இன்று கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமனம் பெற்றுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற இடிஓ மற்றும் என்ஆர்ஐ கவுன்சில் அவார்ட் மற்றும் ஜிஐஓ கான்பிரன்சில் இந்திய கானா வர்த்தக ஆணையாளராக அருண்ராஜா பெரியசாமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் டெல்லி சென்று கானா நாட்டின் ஹை கமிஷனர் குவக் ஆஸ்மாக் செர்மேக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து கானாவில் உள்ள அக்ரா நகரில் இந்திய வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்திய-ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில் மூலம் உலக தினை தினம் பிப்.10ல் கொண்டாடப்பட்டது.

அங்கு மதுரை மீனாட்சி கிரானைட் குழும இயக்குநரான அருண்ராஜா, கானா நாட்டின் வேளாண்மை துணை அமைச்சர் யாவ் ப்ரிம்பாங் அடோ, கானாவிற்கான இந்திய உயர் ஆணையர் சுகந்த் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன.

மேலும் அந்த நிகழ்வில், இந்திய-ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலின் உலகளாவிய தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால், ஐஏடிசி மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் தலைவர் ஜேம்ஸ் ராஜாமணி, நெறிமுறை இயக்குநர் இம்மானுவேல் ராஜாமணி, கானாவின் ஒன் டிவியின் தலைமை நிர்வாகி போலா ரே, இந்திய ஆப்ரிக்கா வர்த்தக கவுன்சிலின் உலகளாவிய துணை தலைவர் வாலி காஷ்வி, இந்திய நமிபியா வர்த்தக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கிருஷ்மூர்த்தி பெரியசாமி, இளையராஜா பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்ராவில் நடைபெற்ற வணிக சமூகம் மற்றும் விவசாய பங்குதாரர்கள் கூட்டத்தில், எம்.எஸ்.எம்.இ பார்மா, முந்திரி, மரம் மற்றும் தங்கம் ஆகியவற்றை இரு தரப்பு வர்த்தக வாய்ப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் கானாவுடன், இந்தியா வர்த்தக ஒத்துழைப்பிற்கு ஆர்வமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்திய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்டுத்துதல் போன்றவைகள் விவாதிக்கப்பட்டது.

Related Stories: