×

நாகர்கோவிலில் விபத்து நிகழும் அபாயம்: அண்ணா பஸ் நிலையத்தில் பேரிகார்டுகள் அகற்றம்

நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டு இருப்பதால், விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகி இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையே பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள், நிழற்கூடைகள் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி, அண்ணா பஸ்நிலையங்கள் முக்கியமானதாகும். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் பணிகள் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் மாவட்டத்திற்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் அண்ணாபஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் உள்ளூர் செல்லும் பணிகள் கூட்டம் காலை முதல் இரவு வரை அலைமோதுகிறது. இது தவிர மினி பஸ்களும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் அண்ணா பஸ் நிலையம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த 2 பஸ் நிலையங்களையும் நவீனப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்ணா பஸ் நிலையத்தில் கிடந்த இருக்கைகள் அகற்றப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக தற்போது கிரானைட் கற்கள் கொண்டு இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பயணிகள் கவனம் இன்றி செல்வது தடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் பிளாட்பாரத்தில் தரையில் அமர்ந்து இருக்கின்றனர். மேலும் கவனம் இன்றி பிளாட்பாரத்தில் இருந்து பஸ்கள் நிற்கும் பகுதிக்குள் வரும் நிலையும் உருவாகி இருக்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பேரிகார்டுகள் அமைத்து விபத்துக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது: அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு டவுண் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், தேவையில்லாத விபத்துக்களில் பயணிகள் சிக்காமல் இருக்க பேரி கார்டுகள் வைத்து பஸ்கள் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பேரிகார்டுகள் அகற்றப்பட்டு இருக்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் கன்னியாகுமரி பஸ்கள் நின்று செல்லும் புறக்காவல் நிலையம் அருகே பயணிகள் அதிக அளவு நின்று பஸ் ஏறிசெல்கின்றனர். ஆனால் அந்த பயணிகள் தேவைக்கு ஏற்ப இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்க வேண்டும். இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணிகள் செய்யமுடியும் என்றனர்.


Tags : Nagarkovil ,Anna bus station , Risk of accident in Nagercoil: Barricades removed at Anna Bus Stand
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...