×

இரும்பு பைப், தடியால் சரமாரி அடி நாகை மீனவர்கள் 6 பேர் மீது நடுக்கடலில் கொடூர தாக்குதல்: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

நாகை: நாகை மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் கொடூரமாக தாக்கி அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலை, உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(45). இவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்றுமுன்தினம் முருகனுடன் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி(45), சந்துரு(21), மாதேஷ் (22), சிவபாலன்(20), ஆகாஷ்(22) ஆகிய  மீனவர்கள் நம்பியார் நகர் கடலில் இருந்து மீன்பிடிக்க  சென்றனர். நேற்று  நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 4 இலங்கை படகுகளில் வந்த 12 கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். இதில் 9 பேர் தங்களது கையில் வைத்திருந்த இரும்பு பைப், கத்தி, தடி ஆகிய ஆயுதங்களால் நாகை மீனவர்களின் படகில் ஏறி அவர்களை தாக்கினர். இதில் முருகனின் இடது கையில் மூன்று விரல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பின்னர் மீனவர்களின் படகில் இருந்த மீன், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், தூண்டில் வலைகள் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இதையடுத்து சக மீனவர்களின் உதவியோடு நாகை மீனவர்கள் புஷ்பவனம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொண்டு வரப்பட்ட 6 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விரல்களில் பலத்த காயமடைந்த மீனவர் முருகன் நாகையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்திய எல்லையில் தான் மீன்பிடித்து கொண்டிருந்தோம்.

ஆனாலும் அவர்கள் தாக்கினர். எதிர்த்து பேசியதால் கடுமையாக தாக்கினார்கள் என்று வேதனையுடன் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர். இந்திய எல்லையில் அத்துமீறி புகுந்து மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Brutal attack on 6 Naga fishermen in mid-sea with iron pipe, barrage: Sri Lankan pirates atakasam
× RELATED மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட...