×

காவல்நிலையம் வந்த மூதாட்டியிடம் கடுமை காட்டிய ஏட்டு ‘சஸ்பெண்ட்’

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூரை சேர்ந்தவர் மூதாட்டி அய்யம்மாள்(80). இவரது மகன்கள் இருவரும், இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். குழந்தைகளுடன் மருமகள்கள், தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகின்றனர். குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவதே சிரமமாக இருக்கும் நிலையில், மூதாட்டி அய்யம்மாளை அவர்களால் பராமரிக்க முடியவில்லை. இதனால் அய்யம்மாள் தனியாக வசித்து வருகிறார். அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகையை கொண்டு காலம் கடத்தி வருகிறார்.

மருமகள்களிடமிருந்து வாழ்க்கை நடத்த பண உதவி செய்ய கேட்டு, அய்யம்மாள் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் சென்று முறையிடுவதும், போலீசாரும் தங்கள் கையில் உள்ள சிறு தொகையை கொடுத்து சமாதானப்படுத்தி அனுப்புவதும் வழக்கமான ஒன்றாகி போனது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற அய்யம்மாளிடம், ஏட்டு யுவராஜ் கடுமை காட்டியுள்ளார். வாகனம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்தவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார்.

இதை சிலர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியது வைரலானது. நியாயம் கேட்டு காவல்நிலையம் வந்த மூதாட்டியிடம் கடுமை காட்டிய ஏட்டின் செயல், பலரின் கண்டனத்துக்குள்ளானது. இதையடுத்து ஏட்டு யுவராஜ் நேற்று முன்தினம் ஆயுத படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் ஏட்டு யுவராஜை, மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


Tags : Attu , Attu 'suspended' for showing severity to the old woman who came to the police station
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்