×

தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகா, அவரது உறவினருடன் செல்ல அனுமதி: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகா, அவரது உறவினருடன் செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம், கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இலஞ்சியைச் சேர்ந்த கிருத்திகா படேலை காதலித்து, கடந்த ஜன.20ல் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கடந்த 25ம் தேதி அவரது பெற்றோர், என்னை தாக்கி விட்டு கிருத்திகாவை கடத்திச் சென்று விட்டனர்.

கிருத்திகாவை மீட்டு ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில், ‘‘12 பேர் மீது வழக்கு பதிந்து, 5 பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படையினர் குஜராத் சென்றுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இதனிடையே கிருத்திகாவை தன்வசம் ஒப்படைக்கக் கோரி அவரது தாத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், அரசு தரப்பில், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட கிருத்திகா பட்டேல் அனுப்பினால் விசாரணை பாதிக்கும். மேலும் குருத்திகா பட்டேல் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அதனால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குருத்திகா பட்டேலை அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறட்டும். இது ஆட்கொணர்வு மனு. சம்பந்தப்பட்ட பெண் மேஜராக உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட பெண்ணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். அதன் அடிப்படையில் குஜராத் பெண் கிருத்திகாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கேரளாவில் உள்ள தனது உறவினர் ஹரிஸுடன் செல்வதாக கிருத்திகா கடிதம் மூலம் நீதிபதிகளிடம் தெரிவித்தார். எழுத்துப்பூர்வமாக எழுதித் தந்ததை அடுத்து உறவினருடன் செல்ல கிருத்திகாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. கிருத்திகா பட்டேல் மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம். கிருத்திகா பட்டேல் விசாரணைக்கு முறையாக ஆஜராகி முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். யாருடன் செல்கிறாரோ அவரே கிருத்திகா பட்டேலின் பாதுகாப்புக்கு பொறுப்பு ஆவர் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கிருத்திகாவை தன்வசம் ஒப்படைக்கக் கோரி அவரது தாத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கிருத்திகாவை அவரது தாத்தாவுடன் அனுப்பக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாரியப்பன் வினித், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Tags : Kritika ,South Kasi ,Madurai Branch ,High ,Court , tenkasi, gujarat, female, krithika, relative, permission, high court, branch, order
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...