×

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2வது டெஸ்ட் டெல்லியில் நாளை தொடக்கம்: 100வது டெஸ்ட் மைல் கல்லை எட்டும் புஜாரா

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதிலும் வெற்றி பெற்று இந்தியா தனது ஆதிக்கத்தை சொந்த மண்ணில் நிலைநாட்டும் முனைப்பில் உள்ளது. முதல் டெஸ்ட்டில் ரோகித்சர்மா சதம் விளாசினார். ஜடேஜா, அக்சர் பட்டேல் அரைசதம் அடித்தனர். பவுலிங்கில் அஸ்வின் 8, ஜடேஜா 7 விக்கெட் வீழ்த்தினர். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் நாளை சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக களம் இறங்குவார் என தெரிகிறது.

மற்றப்படி இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது. புஜாராவுக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்த இலக்கை எட்டும் 13வது இந்திய வீரரான அவருக்கு போட்டி தொடங்கும் முன் பிசிசிஐ சார்பில் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. சொந்த மைதானத்தில் பல வருடங்களுக்கு பின் கோஹ்லி களம் இறங்குவதால் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மறுபுறம் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்டில் படுதோல்வியை சந்தித்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய பவுலர்கள் கூட நாக்பூரில் ஆஸி. சுழலை எதிர்கொண்டு ரன் குவித்த நிலையில், ஆஸி. பேட்ஸ்மேன்கள் இந்திய சுழலை எதிர்கொள்ள முடியாமல் விழிபிதுங்கி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஸ்டீவன் ஸ்மித்தை தவிர மற்றவர்களால் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை. தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டிய நெருக்கடியில் உள்ள ஆஸ்திரேலிய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தொடக்க வீரர் டேவிட் வார்னர் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக டிராவிட் ஹெட் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. கேமரூன் கிரீன், ஹேசல்வுட் ஆடும் லெவனில் இடம்பிடிக்கலாம். இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணிகளும் நாளை 104வது முறையாக டெஸ்ட்டில் மோத உள்ளன. இதற்கு முன் ஆடிய 103 போட்டிகளில் இந்தியா 31, ஆஸி. 43ல் வென்றுள்ளன. 28 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டி
டை ஆகி இருக்கிறது.

5 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் டெஸ்ட்
* டெல்லி மைதானத்தில் இந்தியா இதுவரை 34 டெஸ்ட்டில் ஆடி உள்ளது. இதில் 13ல் வென்றுள்ளது. 6ல் தோல்வி அடைந்துள்ளது. 15 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலியா இங்கு இந்தியாவுக்கு எதிராக 7 டெஸ்ட்டில் ஆடி ஒன்றில் வென்றுள்ளது. 3ல் தோல்வி அடைந்துள்ள நிலையில் 3 டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக இங்கு 2017ல் இந்தியா-இலங்கை இடையே நடந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது.

* வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 1959ல் இந்தியா 644/8 ரன் எடுத்தது தான் அதிகபட்சமாகும். ஆஸ்திரேலியா இங்கு 2008ல் 577 ரன் எடுத்தது தான் பெஸ்ட் ஸ்கோர்.

* 1987ல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியா 75 ரன்னில் சுருண்டது தான் குறைந்தபட்ச ஸ்கோர். 1967ல் இந்தியாவுக்கு எதிராக 107ல் சுருண்டது தான் ஆஸி.யின் குறைந்த ரன்னாகும்.

* சச்சின் இங்கு 10 டெஸ்ட்டில் ஆடி 2 சதத்துடன் 759 ரன் அடித்துள்ளார். ஒரு இன்னிங்சில் விராட் கோஹ்லி இலங்கைக்கு எதிராக 2017ல் 243 ரன் எடுத்தது தான் தனிநபர் பெஸ்ட் ஸ்கோராகும். அதிகபட்சமாக வெங்சர்க்கார் இங்கு 4, கவாஸ்கர் 3 சதம் அடித்துள்ளனர்.

* பவுலிங்கில் கும்ப்ளே இங்கு 7 டெஸ்ட்டில் 58 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அஸ்வின் 4 டெஸ்ட்டில் 27, ஜடேஜா 3 டெஸ்ட்டில் 19 விக்கெட்டும் எடுத்துள்ளனர். 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக கும்ப்ளே 74 ரன் கொடுத்து 10 விக்கெட் எடுத்தது ஒரு இன்னிங்சில் பெஸ்ட் பவுலிங்.

* ஸ்ரேயாஸ் திரும்பி வந்தது மகிழ்ச்சி
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல்டிராவிட் அளித்த பேட்டி: ஸ்ரேயாஸ் திரும்பி வந்து பிட்டாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவர் உடல் தகுதியில் சரியாக இருந்தால், அவர் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டதை வைத்து அவர் நேராக அணிக்குள் வருவார் என்று தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

ஆனால் உண்மையில் அவரது குணாதிசயம்தான் அவரை முன்னிலையில் நிறுத்துகிறது. நெருக்கடியான நேரங்களில் நாங்கள் இருந்தபோதெல்லாம் அவர் மிகச் சிறப்பாக வந்து விளையாடி மீட்டுக் கொடுத்திருக்கிறார். இப்படி ஒருவரின் கடந்த கால சிறப்பான செயல்பாட்டை வைத்து அவர் நேராக அணிக்குள் வந்து விடுவார், என்றார்.

Tags : India ,Australia ,Delhi ,Pujara , India-Australia 2nd Test starts tomorrow in Delhi: Pujara reaches 100th Test milestone
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...