×

ஆட்சியை தக்க வைப்பது யார்? திரிபுராவில் விறுவிறு வாக்குப்பதிவு: வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்

அகர்தலா: திரிபுராவில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆட்சியை தக்க வைப்பதில் பாஜ-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிபுரா மாநிலத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அகர்தலா, திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா  ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.  முதல்கட்டமாக 60 சட்டப்பேரவைகளை கொண்ட திரிபுரா மாநிலம் இன்று தேர்தலை சந்திக்கிறது. இம்மாநிலத்தில் பாஜ-திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎப்டி) கூட்டணி ஆட்சி நடக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, 25 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு மக்கள் விடைகொடுத்து, பாஜவை மக்கள் ஆட்சியில் அமர்த்தினர். தற்போது முதல்வராக மாணிக் சாஹா பதவி வகிக்கிறார். இங்கு ஆட்சியை தக்கவைக்க பாஜ போராடுகிறது. பாஜ 55 தொகுதிகளிலும், ஐபிஎப்டி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் கூட்டணியாக இருந்தாலும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கங்கணம் கட்டி, தனது அரசியல் எதிரியான காங்கிரசுடன் கை கோர்த்து, தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறது.

60 இடங்களில் 43 இடங்களை தன் கைவசம் வைத்து கொண்டு, 13ஐ காங்கிரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒதுக்கியுள்ளது. மீதி 4 இடங்களை இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசலிஸ்டு, பார்வர்டு பிளாக், சுயேச்சை என தலா ஒன்றாக பகிர்ந்து கொடுத்துள்ளது. பாஜ கூட்டணிக்கு கடுமையான போட்டியாக காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கூட்டணி அமைத்துள்ளன. அதோடு, வடகிழக்கு மாநிலத்தின் முன்னாள் அரசு குடும்பங்களின் வாரிசுகளால் உருவாக்கப்பட்ட பிராந்திய கட்சியான திப்ரா மோதா 42 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் மொத்தம் 28.13 லட்சம் வாக்காளர்கள். இதில் 13.53 லட்சம் பேர் பெண்கள். களமிறங்கி உள்ள 259 வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள். மொத்தம் 3,337 வாக்குச்சாவடிகளில், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 28 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த 25,000 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர மாநில போலீசார் உட்பட 31,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில தலைமை தோ்தல் அதிகாரி கிரண்குமார் தினகர்ராவ் தெரிவித்தார்.

வெளிநபர்கள் நுழைவதை தடுக்க சர்வதேச மற்றும் மாநில எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 12.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், ‘திரிபுராவில் பலத்த பாதுகாப்புடன் 60 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த இடத்திலும் தொழில் நுட்ப கோளாறு ஏற்படவில்லை. விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது’ என்றார். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. மாநில முதல்வர் மாணிக் சாஹா டவுன் பர்டோவாலி தொகுதியிலும், ஒன்றிய அமைச்சர் பிரதிமா பவுமிக் தன்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான மார்க்சிஸ்டின் தேசிய செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி சப்ரூம் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இத்தேர்தலில் வெற்றி பெற்று பாஜ மீண்டும் ஆட்சியை தொடர பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். தவிர, திரிணாமுல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்று வாக்குப்பதிவு முடிந்தாலும், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுடன் சேர்த்துத்தான் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும். அதுவரையில் பொறுத்திருக்க வேண்டும்.

Tags : Tripura , Who will retain power? Speedy polling in Tripura: Voters cast their votes in long queues
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை