×

சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: சங்கர் ஜிவால், எச்சரிக்கை

சென்னை: சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், தீவிரமாக கண்காணித்து குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பாக சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், நேற்று (15.02.2023) கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.  

இந்த சிறப்பு தணிக்கையில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 406 குற்றவாளிகள் நேரில் சென்று தணிக்கை செய்யப்பட்டு, குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுத்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், இவ்வழக்குகளில் தொடர்புடைய 307 குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (15.02.2023) ஒரே நாளில் 10 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் பெற்றும், 20 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறுவதற்கான ஆயத்தபணிகள் மேற்கொள்ளப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை பிடித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க காவல் குழுவினர் தொடர்ந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பெருநகரில் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக, காவல் ஆணையாளர் அவர்கள் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், குற்ற பின்னணி நபர்கள் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருவதுடன், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Shankar Jiwal ,Chennai , Strict action against criminals in Chennai: Commissioner of Police Shankar Jiwal, warning
× RELATED கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம்...