முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்த மக்கள்

பழநி: பழநியில் முருகனை திருமணம் செய்த வள்ளியின் இனத்தை சேர்ந்த மக்கள் தாய் வீட்டு சீதனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி துவங்கி பிப்ரவரி 7ம் தேதி வரை நடந்தது. இவ்விழாவில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடப்பது வழக்கம்.

இதில் வள்ளியின் இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளிக்கும், முருகனுக்கும் திருமணம் நடந்ததால் வள்ளியின் பிறந்த வீட்டிலிருந்து தாய்வீட்டு சாதனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த வள்ளியின் இனத்தை சேர்ந்த மக்களில் ஒரு குழுவினர் பழநி முருகனுக்கு நேற்று தாய்வீட்டு சீதனம் கொண்டு வந்தனர். இதில் தேன், திணைமாவு, மா, பலா, வாழை, மக்காச்சோளம், பல்வேறு வகையான பழங்கள், கிழங்கு வகைகள், வில், அம்பு போன்றவை சீதனமாக வைத்து பழநி நகரின் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

தொடர்ந்து கோயிலில் வழங்கி வழிபாடு செய்தனர். சிறுவர், சிறுமியர் மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடை அணிந்து ஆடிப்பாடியபடி வந்தனர். சிறுவர், சிறுமியர் பலர் முருகன், வள்ளி வேடமிட்டிருந்தனர். பக்தர்கள் பலர் அலகுகுத்தியும், சிலம்பு சண்டையிட்டும் ஆடிப்பாடியபடி சென்றனர். இதனைத்தொடர்ந்து மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Related Stories: