தென் ஆப்பிரிக்காவில் கோர விபத்து: தறிக்கெட்டு ஓடிய வேன் மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து: 20 பேர் உயிரிழப்பு!!

கேப் டவுன் :  தென்ஆப்பிரிக்கா நாட்டில் கட்டுப்பாட்டை இழந்த வேன் மோதியதில் சுற்றுலா பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லிம்போபோ மாகாணத்தின் வெம்பே நகரில் ஆற்றின் மேல் கட்டுப்பட்டுள்ள மேம்பாலத்தில் வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் கவச வேன் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பாலத்தில் தறிக்கெட்டு ஓடியது. எதிர்திசையில் வந்த சுற்றுலா பேருந்துடன் வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் நிலைதடுமாறிய பேருந்து  பாலத்தில் இருந்து உருண்டு ஆற்றில் விழுந்தது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ராட்சத கிரேன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றுக்குள் விழுந்த பேருந்தை வெளியே எடுத்து  இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து ஆற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தவர்களையும் மீட்பு குழுவினர் மீட்டனர். இந்த கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Related Stories: