மானாமதுரை கிராமங்களில் இரவில் நுழைந்து பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்: கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

மானாமதுரை: மேலப்பசலை, கீழமேல்குடி, கால்பிரவு உள்ளிட்ட 12 கிராமங்களில் விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மதுரையை கடந்து சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் பகுதியில் வலது, இடது பிரதான பாசன கால்வாய்கள் மூலம் 50க்கும் அதிகமான கிராமக்கண்மாய்களை நிரப்புகின்றது. இதன் மூலம் மூன்றாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.

இப்பகுதியில் நெல்பயிர் சாகுபடியை தொடர்ந்து வாழை, பருத்தி, கரும்பு போன்ற பயிர்களும் கத்தரி, வெண்டை போன்ற நாட்டுக்காய்கறி விளைச்சலுக்கும் இந்த ஆற்றுநீர் பயன்படுகிறது. இதன் மூலம் வைகை கரையிலுள்ள கிராமங்கள் பச்சைபசேல் என செழிப்பாக காணப்படுகின்றன. இந்நிலையில் மானாமதுரை வட்டாரத்தில் பெரிய கண்மாய்களாக உள்ள மானாமதுரை, கீழமேல்குடி, கால்பிரவு, பீசர்பட்டினம், ராஜகம்பீரம், மேலமேல்குடி, தீத்தான்பேட்டை, கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், வாகுடி, குண்டாமணியேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெரிய கண்மாய்களில் உள்வாய்ப்பகுதி கண்மாய்களில் கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் காட்டுபகுதியில் இருந்து இங்கு குடியேறிய பன்றிகள் சிறிதும் பெரிதுமாக வளர்ந்து தற்போது ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளன.

இவை இரவுநேரங்களில் கருவேலமர காடுகளில் இருந்து வெளியேறி ரோடு மற்றும் வாய்கால்களை கடந்து வயல்களை அடைந்து அங்கு சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை நாசம் செய்கின்றன. ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான பன்றிகள் வயல்களுக்குள் நுழைந்து நிலத்தை தோண்டி வளர்ந்துள்ள பயிர்களின் வேர்களை கடித்து சேதப்படுத்துகின்றன. விவசாயிகள் இரவுநேரங்களில் வயல்களில் காத்துகிடந்து வெடிவைத்து விரட்ட முயற்சித்தாலும் அவை கூட்டமாக சேர்ந்து கடிக்க முற்படுகின்றன. வனத்துறையினர் காட்டுபன்றிகளை கொல்லக்கூடாது என்று கூறுவதால் வேட்டை நாய்களையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

கடந்த ஆண்டு பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க மின்வேலி அமைத்திருந்த போது பீசர்பட்டினம் பகுதியில் ஒருவர் வேலியில் சிக்கி இறந்துபோனார். இதையடுத்து விவசாய நிலங்களில் மின்வேலியும் அமைக்க முடியாத நிலை உள்ளது. பன்றிகளை கட்டுப்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் வனத்துறை எடுக்காத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக விவசாய நிலங்களை அழித்து விவசாயம் பொய்த்து போகும் அபாயம் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே இப்பகுதியில் விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டு கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது.

எனவே பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கீழமேல்குடி விவசாயி வெள்ளமுத்து கூறுகையில், இப்பகுதியில் இரண்டு ஏக்கரில் நான் விவசாயம் செய்து நெல் விளைந்த நிலையில் பன்றிகள் தினம் தோறும் வந்து விவசாயத்தை அழித்து விட்டது. தினமும் இரவு பன்றிகள் வந்து நன்றாக விளைந்து நிற்கிற நெல் வயலை அழித்து வருகின்றன.

ஒரு ஏக்கர் நிலத்தில் நாற்பது முதல் ஐம்பது நெல் மூட்டைகள் மகசூல் வரும். பன்றிகள் அழிப்பதால் விவசாய விளைச்சல் பாதியாக குறையும் ஆபத்து உள்ளது. இரவு நேரங்களில் கொட்டும் பனியிலும், கொசுக்கடியிலும் கண்விழித்து கொண்டு பன்றிகள் வராமல் தடுப்பதற்கான

முயற்சிகளில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்சனையில் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது மிக அவசியமானது என்றார்.

தூக்கமே போச்சு... விவசாயிகள் குமுறல்

மேலப்பசலை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் அய்யனார் கூறுகையில், நாட்டிற்கு தேவையான உணவு வகைகளை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் கடினமாக உழைக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக மானாமதுரை வட்டாரத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பன்றிகள் வயல் வரப்புகளை சீரழித்து விட்டன. கடுமையான குளிரில் தூங்காமல் இரவு நேரத்தில் கண்விழித்து இருந்து வெடி போட்டு அதனை விரட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

வயல்வெளிகளில் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் விவசாயிகளை கடித்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. உயிரை கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. கண்மாய்களில் உள்ள கருவேலமரங்களை அழிப்பதுடன் பன்றிகளை இந்த பகுதியில் இருந்து விரட்டுவதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும். விவசாயிகளின் வேதனையை தீர்க்க அரசும் மாவட்ட நிர்வாகமும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: