நெல்லை: தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என பெயர் எடுத்துள்ள தாமிரபரணிக்கு தீராத தொல்லையாக கிளை நதிபோல் கழிவுநீர் பெருக்கெடுத்து கலக்கிறது. இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் வற்றாத ஜீவநதியாக தன்பொருநை நதியாம் தாமிரபரணி உள்ளது. பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் தோன்றி நெல்லை மாவட்டத்திலேயே கடலில் கலக்கும் சிறப்பு வாய்ந்தது. இந்த நதி கரையோர ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் நேரடியாக கலப்பது போன்ற துயரங்களை நீண்டகாலமாக அனுபவித்து வருகிறது.
குறிப்பாக நெல்லை மாநகர பகுதியில் அதிகளவில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தூத்துக்குடி மாவட்ட நதி ஓடும் பாதையிலும் இந்த தொல்லைகள் உள்ளன. நெல்லை மாநகரில் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. இதனால் வெள்ளம் ஏற்படும் போது நீரோட்டம் திசைமாறி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தும் நாளாக அமைந்தது.
அப்போது நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாபநாசம் திருவள்ளுவர் நகரில் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்து 17 உயிர்கள் பலியாகின. சந்திப்பு பஸ்நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. மாநகர நதிக்கரை பகுதிகளில் தாறுமாறாக வெள்ளம் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நதிக்கரையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. மாநகர பகுதியில் நதியின் உள்பகுதியில் ஆக்கிரமித்து கட்டிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடித்து நதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதே நேரத்தில் நதியில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநகராட்சி சார்பில் நதிக்கரையோரம் தனி கழிவுநீர் பாதை அமைத்து அதில் கழிவுநீர் சிறிய கால்வாய்போல் செல்லவும் சுத்திகரிப்பு செய்யவும் சில இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது முழு பலனை தரவில்லை. இதிலும் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நதியில் கழிவுநீர் கலக்கும் நிலை உள்ளது. மாநகரில் தற்போது பாதாளசாச்கடை அமைக்கும் பணி சில பகுதிகளில் நடைபெறுகிறது. இப்பணி முழுமையடைந்தால் நதியில் கழிவுநீர் கலப்பது கட்டுக்குள் கொண்டு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதும் மாநகர பகுதி உள்ளிட்ட பல இடங்களில் கழிவுநீர் ஓடை போல் வந்து தாமிரபரணியில் கலக்கிறது. இதனால் ஆற்றில் குளிப்பவர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. கோடை காலத்தில் குறைந்த அளவில் தண்ணீர் செல்வதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். எனவே தாமிரபரணியின் புனிதத்தை காக்க ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அமல்படுத்தவேண்டும் என நதிநீர் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் வற்றாத ஜீவநதியாக தன்பொருநை நதியாம் தாமிரபரணி உள்ளது. பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் தோன்றி நெல்லை மாவட்டத்திலேயே கடலில் கலக்கும் சிறப்பு வாய்ந்தது.
