×

சிங்கம்புணரி அருகே 2 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா: மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2 கண்மாய்களில் நடந்த மீன்பிடி திருவிழாவில், கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி கிராமத்தில் உள்ள பன்னிகண்மாயில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பியிருந்தது. தற்போது விவசாய பணிகள் முடிவடைந்து தண்ணீர் வற்றி வரும் நிலையில் மீன்பிடி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் மேற்பார்வையில் மீன்பிடி திருவிழா தொடங்கியது.

இதில் கண்ணமங்கலப்பட்டி, வகுத்தெலுவன்பட்டி, தலைவணங்காம்பட்டி, பருகுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஊத்தா, பரி, கச்சா, வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் அதிக அளவில் ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் சிக்கின. இதேபோல் வேங்கைபட்டி சாலையில் உள்ள கோவில்பட்டி கோயில் கண்மாயிலும் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள், கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் ஏராளமான நாட்டு மீன்கள் சிக்கின.

Tags : Singampunari , Fishing festival in 2 Kanmais near Singampunari: People carrying fish
× RELATED சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா