×

திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் அரியானாவை சேர்ந்த ஹரிப் என்பவரை கைது செய்தது தனிப்படை போலீஸ்..!!

சண்டிகர்: திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் அரியானாவை சேர்ந்த ஹரிப் என்பவரை தனிப்படை போலீஸ் கைது செய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய இடங்களில் கடந்த 12ம் தேதி ஒரே இரவில் 4 ஏடிஎம்களை உடைத்து மர்ம கும்பல் ரூ.73 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி மாலை திருப்பதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த டாட்டா சுமோ காரை மர்ம நபர்கள் திருடி சென்றதாக அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவண்ணாமலை தேனிமலை ஏடிஎம் மையத்தில் கொள்ளை நடந்த நேரத்தில் சுமார் 15 நிமிடம் ஒரு டாட்டா சுமோ நின்றிருப்பதும், அதிலிருந்து 3 இளைஞர்கள் கீழே இறங்கி செல்வதும் அந்த பகுதியில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே திருப்பதியில் திருடிய காரை திருவண்ணாமலையில் கொள்ளையடிக்க வெளி மாநில கொள்ளையர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இது தொடர்பாக கேஜிஎப் பகுதியில் சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தங்க வைத்த கர்நாடக பகுதியை சேர்ந்த நபரை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அரியானா மாநிலம் நியூஜ் மாவட்டத்தை  சேர்ந்த  முக்கிய குற்றவாளி ஹிரிப்  (35) என்ற நபரை தனிப்படை போலீசார்  கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். 


Tags : Thiruvanamalai A. TD Harib ,Ariana , Thiruvannamalai, ATM, robbery, Ariana, arrested
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்