×

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்களை, சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை முழுமையாக அமல்படுத்தவில்லை. எனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தருமாறு திரையரங்குகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், பல்வேறு திரையரங்குகளில் சோதனை நடத்தப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. எந்தெந்த திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் தொடரும். சினிமா டிக்கெட் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசு கண்காணிப்பு தொடர வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Tags : Tamil Nadu Govt , High fee, charging theater, action against, Tamil Nadu Govt, ICourt order
× RELATED புதிய குடும்ப அட்டைகள்...