தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் செயற்குழு விவாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், இரு துணைத் தலைவர்கள், இரு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், அறிவிப்புக்கு தடை விதித்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற  நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும், கவுன்சில் உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட 8 தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன், செயற்குழுவில் விவாதிக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமனை தன்னிச்சையாக அறிவித்துள்ளதாகவும், இதனை ரத்து செய்து நடுநிலையான ஒருவரை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த எதிர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன், தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டுவிட்டதால் இந்த மனுவே காலாவதியாகிவிட்டது என்றார். இதையடுத்து, கடந்த ஜனவரி 13ம் தேதி நடந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் நீதிபதி. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: