×

கியூ பிராஞ்ச், நுண்ணறிவுப் பிரிவு தரும் தகவல்களை கவனமாக ஆராய்ந்து குற்ற செயல்களை முன்கூட்டி தடுக்க வேண்டும்: சேலம் சரக காவல் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சேலம்: ‘கியூ பிராஞ்ச், நுண்ணறிவுப் பிரிவு தரும் தகவல்களை கவனமாக ஆராய்ந்து குற்றச்செயல்களை முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று சேலம் சரக காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் போலீஸ் உயர் அதிகாரிகளுடனான சட்டம்- ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:

காவல்துறையின் பணிகள் மக்கள் எளிதில் அணுகும் விதமாக இருக்கவேண்டும், காவல் நிலையத்திற்கு மக்கள் எவ்வித அச்சமுமின்றி புகார் அளிக்க வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும். மக்களுக்கும், காவல்துறைக்குமான உறவு என்பது எளிமையானதாகவும் மனிதநேய அடிப்படையிலும் அமைய வேண்டும். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் காட்டும் அணுகுமுறைதான் அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் காவல் ஆய்வாளரும் மேற்கொள்வார்கள் என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும். காவல்துறையின் செயல்பாடுகள் மக்களுக்குத்தெரியும்படி வெளிப்படையாக இருக்கவேண்டும். எந்தவொரு சம்பவத்தை பற்றியும் நடந்த பிறகு ஆராய்வதைவிட அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்பே அறியப்பெற்று, அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது சிறப்பாக இருக்கும்.

இதற்கு காவல்துறையின் க்யூ பிராஞ்ச், நுண்ணறிவுப் பிரிவு ஆகியவை தரும் தகவல்களை கவனமாக ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோத செயல்களை, குற்றச்சம்பவங்களைத் தடுப்பதுதான் திறமையான காவல் துறைக்கு இலக்கணம். சமயம், மதம் அல்லது பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில், உதாரணத்திற்கு கோவில் திருவிழாக்கள் எருதுவிடும் நிகழ்வுகள் போன்றவற்றில் கவனக்குறைவாக இருந்து விட்டால் அது மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் உள்ள நற்பெயரை பாதித்துவிடும்.

மேலும் காவல்துறை கவனம் செலுத்தவேண்டிய மற்றுமொரு முக்கிய இனம் போதைப்பொருள் ஒழிப்பு. சில மாவட்டங்களில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், சரகம் முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மாநில எல்லைப்பகுதியாக இருப்பதால் உங்கள் சுவனம் இன்னும் அதிகமாக இருக்கவேண்டும். காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலையங்களை அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு அங்கு வரும் பொதுமக்களை சந்திப்பது, மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத் தருவதோடு காவலர்களிடையே ஒரு எச்சரிக்கையான நிலையையும் உண்டாக்கும்.

இந்த மாவட்டங்களில் எந்த சூழ்நிலையிலும் சாதிக்கலவரம் ஏற்படாமல் கட்டாயம் பார்த்துக்கொள்ளவேண்டும். இதில் மாவட்ட கலெக்டர்களின் பங்கு மிக முக்கியமானது. வாராந்திர சட்டம்- ஒழுங்கு கூட்டத்தில் இதனை வருவாய் மற்றும் காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்தி, தேவையான இடங்களில் அமைதிப்பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்னைகளை ஆரம்ப கட்டத்திலேயே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறைகள் நீதித்துறையுடன் ஒருங்கிணைந்து வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆண்டுக்கணக்கில் வழக்குகளை நடத்துவது குற்றவாளிகளுக்குத்தான் சாதகமாக முடியும். எனவே காவல் கண்காணிப்பாளர்கள் பழைய வழக்குகனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருளை பெருமளவு ஒழிக்கும் காவல் கண்காணிப்பாளரை எப்போதும் பெரிதும் பாராட்டுவேன்.

பெரும்பாலும் குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களாக இருப்பதால் அவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாமல் அவர்களின் புகார்களில் உள்ள உண்மைத்தன்மையை ஆய்ந்தறிந்து அவர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருக்கவேண்டும். பல்வேறு அரசுப்பணிகள் இருந்தாலும் காவல்துறைக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. அதற்கான பெருமையையும் மாண்பையும் நீங்கள் இன்னும் உயர்த்திக்காட்டும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி சங்கர், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.



Tags : CQ Branch ,Intelligence Division ,Chief of the Chief of Police ,Salem Saraki Police ,G.K. Stalin , Q Branch should scrutinize information provided by Intelligence Unit and preemptively prevent crime: Chief Minister MK Stalin orders in review meeting with Salem Police officers
× RELATED திருச்சி விமானத்தில் டைல்ஸ் கட்டிங்...