×

ஓசோனின் தன்மையை கண்டறிய பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்கள்: 19ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

சென்னை: ‘ஓசோனின் தன்மை மற்றும் வானியல் நிலவரங்களை அறிய 5000 மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள, 150 செயற்கைக்கோள்கள்  வரும் 19ம் தேதி விண்ணில் ஏவப்படும்’ என்று ஸ்பேஸ் ஜோன் மற்றும் அப்துல்கலாம் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மேகலிங்கம் கூறியதாவது: ஓசோனின் தன்மை, ஆக்சிஜன் அளவு மற்றும் காற்று மாசு உள்ளிட்ட 150 விதமான தகவல்களை ஆய்வு செய்யவும், அவற்றை கண்டறியும் வகையில் செயற்கைக்கோள்களை ஏவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 5000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இணைந்து 150 செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளனர்.

இவை, வரும் 19ம் தேதி பட்டிபுலத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும்.  பூமியிலிருந்து 6 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட் உதவியுடன் செலுத்தப்பட்டு, பின்னர் 8 நிமிடங்களில் பாராசூட் உதவியுடன் மீண்டும் அவை பூமிக்கு திரும்பும்.  மாணவர்கள் வடிவமைத்த செயற்கைக்கோள்களால் காற்றின் வேகம், காற்று மாசு, ஆக்சிஜன் அளவு, ஈரப்பதம், ஓசோனின் தன்மை உள்ளிட்ட 150 வகையான தகவல்களை சேகரிக்க முடியும். அந்த தகவல்கள் மாணவர்களுக்கு தரப்படும். செயற்கோள் தொழில்நுட்பத்தை பள்ளி மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் 80 சதவிகித அரசுப்பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும், இத்திட்டத்திற்கான 85 சதவீத நிதியை மார்ட்டின் லாட்டரி நிறுவனம் ஏற்றுள்ளது.


Tags : 150 satellite created by Ozone character, school student, launched on 19th
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...