×

கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவில், அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து பிப்ரவரி 8ம் தேதி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஓய்வுபெற்ற நீதிபதியுடன் கலந்தாலோசித்து குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. ஆகமத்தைப் பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகன், ஆகமங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். தகுதியில்லாத அவரை, கோயில்களின் ஆகமம் கண்டறியும் குழுவில் நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், சத்தியவேல் முருகனை நியமிக்க கூடாது எனக் கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவர் ஆகம குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகமங்களுக்கு எதிராக அவர் பேசியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோயில் ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவில் சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.


Tags : discovery committee ,ECtHR , Temple, Agama, Inquiry Committee, Consultation, Appointment of Members, Interim Restraint, Court Order
× RELATED பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட...