×

இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஊழல் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது: 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில்  இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்ட  புகாரில் முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஓய்வு  பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரை மத்திய அமலாக்கத்துறை நேற்று முன்தினம் நள்ளிரவு  மீண்டும் கைது செய்தது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக  பார்சலில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தங்கம் கடத்தப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமீரக துணைத் தூதரின் நிர்வாக  செயலாளராக பணிபுரிந்த சொப்னா உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம்  நடந்த விசாரணையில், சொப்னாவுக்கும், முதல்வர் பினராய் விஜயனின் முதன்மைச்  செயலாளராக பணிபுரிந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கருக்கும் நெருங்கிய  தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அமலாக்கத்துறை, சுங்க  இலாகா, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் சிபிஐ ஆகியவை வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் சுங்க இலாகாவும், மத்திய  அமலாக்கத் துறையும் சிவசங்கரை 2 முறை கைது செய்து விசாரணை நடத்தியது.  இதற்கிடையே கேரளாவில் ஏழைகளுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்கும் லைப் மிஷன்  என்ற திட்டத்தில் சொப்னாவும், சிவசங்கரும் கோடிக்கணக்கில் கமிஷன்  வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே  கடந்த மாதம் 31ம் தேதி சிவசங்கர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தநிலையில்  கடந்த 3 நாளாக சிவசங்கரிடம்,  அமலாக்கத் துறை அதிகாரிகள் கொச்சியில்  வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல முக்கிய விவரங்கள்  கிடைத்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12  மணி அளவில் சிவசங்கர் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு பின்னர் நேற்று மதியம் எர்ணாகுளம் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிவசங்கரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. விசாரணையின்போது 2 மணி நேத்திற்கு ஒரு முறை ஓய்வு கொடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Tags : Pinarayi Vijayan ,principal ,Sivashankar , Free House , Project Scam, Pinarayi Vijayan, Principal Secretary, Arrested
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்