×

அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டு லட்சம் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கும் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: அடுத்த 5  ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் 2 லட்சம் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், பால், மீன்பிடி கூட்டுறவு சங்கங்களை அமைக்க ஒன்றிய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:

நாடு முழுவதும் தற்போது  சுமார் 63,000 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதை மேலும் வலுப்படுத்தவும், கிராமங்கள் தோறும் அதை கொண்டு செல்லவும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு கூட்டுறவு சங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பால் கூட்டுறவு சங்கம், கடலோர கிராமங்களில் மீனவ கூட்டுறவு சங்கங்கள் என அடுத்த 5 ஆண்டுகளில்  2 லட்சம் பல்நோக்கு கூட்டுறவு,பால்,மீன் வளர்ப்பு கூட்டுறவுகளை அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அரசின் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். இதன் மூலம் அரசின் பல்வேறு திட்டங்கள் இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும். மேலும் புதிதாக தொடங்கப்படும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் நவீன மயமாக்கப்படும். இது விவசாயிகளுக்கு  வருமானத்தை அதிகரிக்கும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை உதவும். கடந்த ஆண்டு ஜூன் மாதம்  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு  கூட்டுறவு சங்கங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும்  கூட்டுறவு சங்கங்கள் அனைத்தையும் கணினிமயமாக்க  ஒப்புதல் அளித்தது.  இந்த திட்டத்தின் அடிப்படையில்  சுமார் 63,000 கூட்டுறவு சங்கங்கள் ரூ.2,516 கோடி மதிப்பில் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. அதில் ரூ.1,528 கோடி நிதி ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.

கிராமங்களை மேம்படுத்த ரூ.4800 கோடி: கிராமங்களை மேம்படுத்த துடிப்பான கிராமங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.4800 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக வடகிழக்கு எல்லையோர கிராமங்களில் சாலை வசதி உள்ளிட்ட பணிகளுக்காக இதில் ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் வடகிழக்கு எல்லையோர கிராமங்கள் நவீனப்படுத்தப்படும். அகதிகள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 19 மாவட்டங்களில் 46 எல்லையோர தாலுகாக்கள் இதன் மூலம் பயன்பெறும்.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 663 கிராமங்கள் மேம்படுத்தப்படும் வடக்கு எல்லையில் உள்ள எல்லைக் கிராமங்களின் உள்ளூர் இயற்கை  வளங்களின் அடிப்படையில்  இளைஞர்கள், பெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். இதுதவிர  தவிர ‘ஒரு கிராமம்-ஒரு தயாரிப்பு’ என்ற கருத்தின் அடிப்படையில்  சுற்றுலாத் திறன் மேம்படுத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Cabinet , 5 years, two lakhs, co-operative society, establishment plan, Cabinet approval
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...