×

கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு விவசாயிகள், தொழில் துறையினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்: ஓசூரில் விமான நிலையம் அமைக்க கோரிக்கை

சென்னை: சேலத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் மற்றும் தொழில் துறையினருடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது, ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று சேலம் வந்தார்.

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த முதல்வருக்கு, கலெக்டர்கள் கார்மேகம், ஸ்ரேயா சிங், சாந்தி, தீபக் ஜேக்கப் ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். பின்னர், சேலம் மாநகர ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடினர். அப்போது, சேலம் மண்டலத்தில் உள்ள மரவள்ளி விவசாயிகளை மேம்படுத்தும் வகையில், ஜவ்வரிசியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும், கிருஷ்ணகிரி மாவட்டம்,  போச்சம்பள்ளி பகுதியில் தென்னை ஆராய்ச்சி மையம் மற்றும் தேங்காய் எண்ணெய்  உற்பத்தி ஆலை தொடங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும், தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானிய  உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான தொடர்பு  ஏற்படுத்த, முதல்நிலை சிறுதானியம்  பதப்படுத்தும் மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்து தர வேண்டும். வேளாண்மை தொடர்பான செய்திகளுக்காக “விவசாயிகள் பண்பலை” நிலையம்  அமைத்திட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.அதன்பின்னர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தினர் முதல்வரை சந்தித்து பேசினர். சேலம் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத்திற்கு தனி அலுவலகம்,  தொழிற்சாலைகளுக்கு சிறப்பு நேரத்திற்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்  என கோரிக்கை வைத்தனர். மேலும், ஓசூர் தொழில் நிறுவனங்களின் சங்கம் சார்பில், ஓசூரில்  விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து, மாம்பழக்கூழ் உற்பத்தியாளர் சங்கத்தினர், மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும்போது கிடைக்கும் தோல், நார் போன்ற  கழிவுகளைக் கொண்டு இயற்கை எரிவாயு ஆலை அமைத்து தர வேண்டும், ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும், பையூர் வேளாண்  ஆராய்ச்சி நிலையத்தில் மாம்பழ சாகுபடிக்கான தனித்துறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல், ரொக்க  கடன் வட்டி மானியம் அளிக்க வேண்டும், சேகோ மற்றும் ஸ்டார்ச்சுக்கு குறைந்தபட்ச ஆதார  விலை நிர்ணயிக்க வேண்டும், மதிப்புக் கூட்டு பொருட்களை தயாரிக்க சேகோ-சர்வ்  மூலம் ஆராய்ச்சிக்கூடம் அமைக்க வேண்டும் என, ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, முதல்வரிடம் பேசிய அனைத்து மாவட்ட பாடி பில்டர்கள் சம்மேளத்தினர், நாமக்கல்  மாவட்ட லாரி பாடி கட்டும் தொழிற்பேட்டையில், தொழில் துவங்குவதற்கு ஏதுவாக  அனைத்து தொழிலகங்களுக்கும் ஒரே வடிவமைப்பில் ஷெட் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினர். பின்னர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மலையகப் பகுதி பழங்குடி மக்கள், தங்கள் பகுதியில் சாலை வசதிகள் மற்றும் கால்நடை மருத்துவமனை  வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதேபோல், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடைகள் உற்பத்தியாளர்கள் சங்கம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சங்கம், சிறுதானிய மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். தொடர்ந்து அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, உரியவற்றை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். இந்த கலந்துரையாடலின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, பட்டுவளர்ச்சித்துறை இயக்குநர் விஜயா ராணி, சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் பூங்கொடி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

*பஸ் நிலையத்தில் முதல்வர் ஆய்வு
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து காரில் சேலம் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வழியில் யாரும் எதிர்பாராதவிதமாக ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார், தனித்தாசில்தார், வட்டவழங்கல் அலுவலரிடம் பணியாற்றும் விதம் குறித்து கேட்டறிந்தார். கோப்புகளை பார்வையிட்ட முதல்வர், அரசின் நலத்திட்டங்கள், ஓமலூர் தாலுகாவில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக காத்திருந்த பெண்கள், மூதாட்டிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார்.  

தொடர்ந்து சாலை நெடுகிலும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சேலம் மாநகரில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் மேல் தளத்திற்கு அதிகாரிகளுடன் நடந்து சென்று, பணிகள் நடைபெறும் விதம் குறித்து கேட்டறிந்தார். விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

* வேலை வாய்ப்பை உறுதி செய்த நான் முதல்வன் திட்டம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, நான் முதல்வன் திட்டத்தின் மூலம், வழங்கப்படும் இயந்திர வழி கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன் பயிற்சிகள், தங்களது வேலைவாய்ப்பிற்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தது என எடுத்துரைத்தனர்.  இத்திட்டத்தை வழங்கியதற்காக, மாணவர்கள் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.Tags : Chief Minister ,Farmers and Industry Department ,G.K. Stalin ,Osur , Field Study, Chief Minister, Farmers, Industry Department, Discussion
× RELATED சொல்லிட்டாங்க…