×

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் 40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் அதிரடி

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்கு மூலத்தின்படி, என்ஐஏ அதிகாரிகள் நேற்று தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, நீலகிரி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் கர்நாடகா, கேரளா என மொத்தம் 40 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள், ரூ.4 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிகாலையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின்(28) என்ற இன்ஜினியர் உடல் கருகி பலியானார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, உயிரிழந்த ஜமேஷா முபினுடன் நேரடி தொடர்பில் இருந்து அவரது நண்பர்களான முகமது அசாரூதின்(23), அப்சர்கான்(28), முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(27) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பின்னர், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் நடத்திய சோதனையில் வெடி பொருட்கள் தயாரிக்க தேவையான 75 கிலோ மூலப்பொருட்கள், பயங்கர விபத்தை ஏற்படுத்தக் கூடிய பொட்டாசியம் நைட்ரேட், கருப்பு பவுடர், தீ பெட்டி, 2 மீட்டர் வெடி மருந்து திரி, நைட்ரோ கிளிசரின், சிவப்பு பாஸ்பரஸ், பெட்டன் பவுடர், அலுமினியம் பவுடர், ஆக்சி 99 ஆக்சிஜன் சிலிண்டர், சல்பர் பவுடர், ஸ்டெர்லி சர்ஜிக்கல், கண்ணாடி மார்பிள்ஸ், 9 வோல்ட் பேட்டரி, பேட்டரி கிளிப், ஒயர்கள், இரும்பு ஆணிகள், ஸ்விட்ச், காஸ் சிலிண்டர், காஸ் ரெகுலேட்டர், இன்சுலேசன் டேப், பேக்கிங் டேப், ஹேன்ட் கிளவ், நோட்டு, பல்வேறு இஸ்லாமிய மதம் தொடர்பான புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பயங்கர விபத்தை ஏற்படுத்தும் வெடி பொருட்களின் மூலப்பெருட்களை, உயிரிழந்த ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரும் ஆன்லைன் மூலம் வாங்கியது தெரியவந்தது. இதனால், சிலிண்டர் வெடிப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. அதைதொடர்ந்து, இந்த வழக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தேசிய புலானய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதன்படி கார் வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை, தனியாக வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அளித்த தகவலின் படி கடந்த நவம்பர் மாதம் என்ஐஏ அதிகாரிகள் கோவை, சென்னை, தூத்துக்குடி என மாநிலம் முழுவதும் 45 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் அனைவரும் நேரடியாக தொடர்பில் இருந்ததும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு நிதி உதவிகள் செய்த ஆவணங்கள் சிக்கியது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம் மங்களூரு பகுதியில், ஆட்ேடா ஒன்றில் கடந்த நவம்பர் 19ம் தேதி குக்கர் குண்டு வெடித்தது.  அதில், குக்கர் குண்டு எடுத்து வந்த முகமது ஷாரிக் படுகாயங்களுடன் உயிர்தப்பினார். இந்த சம்பவம் குறித்து மங்களூரு போலீசார் விசாரணை நடத்தியபோது, கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு போன்று மங்களூரு பகுதியில் பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்த சதித்திட்டம் தீட்டியது. ஆனால், குக்கர் குண்டு ஆட்டோவில் எடுத்து சென்றபோது, திடீரென வெடித்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், கோவை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு வழக்குகள் அனைத்தும், தீவிரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மூலம் நடந்தது என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது ஷாரிக் தமிழ்நாட்டில் உதகை, கோவை, நாகர்கோவில், மதுரை ஆகிய இடங்களில் தங்கி பணியாற்றியதும், குக்கர் குண்டு வெடிப்புக்கு  பொறுப்பேற்றுள்ள ‘இஸ்லாமிய தற்காப்பு கவுன்சில்’ அமைப்புக்கு, தமிழ்நாட்டில் முகமது ஷாரிக் ஆட்கள் சேர்த்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையதாக குன்னூரை சேர்ந்த உமர் பாருக் (38), உக்கடத்தை சேர்ந்த பெரோஸ்கான் (27), முகமது தவுபிக் (29), சேக் இதயதுல்லா (38), உக்கடம் வின்சென்ட் ரோட்டை சேர்ந்த சனாபர் அலி (30) என 5 பேர் கைது என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 5 பேரை சென்னை அருகே உள்ள பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் கைது ெசய்யப்பட்ட 5 பேரும் பல அதிர்ச்சி தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளனர்.

அதன்படி, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு என இரண்டு வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என 40 இடங்களில் நேற்று உள்ளூர் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் கோவையில் 14 இடங்கள், திருச்சியில் 1 இடம், நீலகிரியில் 2 இடங்கள், திருநெல்வேலியில் 3 இடங்கள், தூத்துக்குடியில் 1 இடம், சென்னையில் 3 இடங்கள், திருவண்ணாமலையில் 2 இடங்கள், திண்டுக்கலில் 1 இடம், மயிலாடுதுறையில் 1 இடம், கிருஷ்ணகிரியில் 1 இடம், கன்னியாகுமரியில் 1 இடம், திருப்பூர்,  தென்காசி உட்பட மொத்தம் 32 இடங்களில் நடந்தது.

 குறிப்பாக, கோவையில் உக்கடம், கோட்டைமேடு, வின்சென்ட் ரோடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பைசூர் ரகுமான் வீடு, குனியமுத்தூர், பிருந்தாவன் சர்க்கிள், வசந்தம் நகர், பாரத் நகர், பி.கே செட்டி வீதியில் உள்ள தன்சீர் வீடு உள்ளிட்ட 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று நேற்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த கணினி, செல்போன் ஆகியவற்றை சோதனை செய்தனர். பின்னர், அதில் உள்ள விவரங்களை சேகரித்தனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.

 அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஜா முகைதீன். இவர் கடந்த 6 ஆண்டுகளாக, நாகர்கோவிலில் பாலமோர் ரோட்டில் ரீவைண்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் தூத்துக்குடியில் உள்ளார். அவரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் உள்ள காஜா முகைதீனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. என்.ஐ.ஏ. சோதனை குறித்து தகவல் கிடைத்ததும் கியூ பிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசாரும் வந்தனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை முடித்து சென்றதும், உளவு பிரிவு போலீசாரும் காஜா முகைதீனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின், வாட்ஸ் அப் குழு நடத்தினார். அதில் இடம் பெற்று இருந்தவர்கள், அதில் இருந்து வெளியேறிவர்களிடம் விசாரணை நடக்கிறது. அதன் ஒரு கட்டமாகவே, இந்த விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பே, காஜா முகைதீன் வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. நெல்லை டவுன் கரிக்கா தோப்பு பகுதியை சேர்ந்த அன்வர்(38) என்பவர் வீட்டில் என்ஐஏவினர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கே.டி.எம் தெருவில் உள்ள ஆரிஸ் கான் (37) என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் அப்துல்லா என்பவர் வீட்டிலும் இச்சோதனை நடத்தப்பட்டது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல திருச்சி, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே வடகரை, திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே நெய்க்காரப்பட்டி ராஜா முகமது(35) வீடு, திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள தனியார் தேங்காய் ஏற்றுமதி நிறுவனத்தில் ராஜா முகமது வீடு, பொள்ளாச்சி ஜோதிநகர் டி.காலனி பிஆர் கந்தசாமி வீதியில், தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு முன்னாள் மாநில நிர்வாகி உமர் (எ) சையது ரகுமான் வீடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த 3 பேர் திருவண்ணாமலையில் தங்கியுள்ளனர். நேற்று காலை 6 மணியளவில் திருவண்ணாமலைக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள், 3 பேர் தங்கியிருந்த வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர். பின்னர் 3 பேரையும் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரணை நடத்தினர்.

சென்னையை பொறுத்தவரை, கொடுங்கையூர் தென்றல் நகர் 8வது தெருவில் வசித்து வரும் முகமது நியமத்துல்லாஹ் (33), இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வந்தனர். இதன் பின்னர் அவர்கள் முகமது நியமத்துல்லாஹ்விடம் கோவை குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பு மற்றும் அவர் யாருடன் செல்போனில் தொடர்பு கொண்டார் என்பது குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இல்லாதவர் என்றும் எந்த அமைப்புகளுடனும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என்றும் முகமது நியமத்துல்லா தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரிடம் இருந்து செல்போனை வாங்கிக்கொண்டு தேசிய புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரும்படி கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முகமது நியமத்துல்லாவின் தந்தை கணேசன். இவர் கோயில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கும் புரோகிதராக இருந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்துக்கு மாறியதால் ஹரிஹரன் என்ற தனது பெயரை முகமது நியமத்துல்லா என்று மாற்றிக்கொண்டார்.  இதன்பின்னர் தமிழக முழுவதும் சென்று இஸ்லாம் மார்க்கம் தொடர்பான கருத்துக்களை தேவைப்படுபவர்களுக்கு போதித்து வருகின்றார். கடந்த 2018ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இவரிடம் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், காசிமேடு, கிண்டி பகுதியில் கார் வெடிப்பு வழக்கில் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு ஆகிய 2 வழக்குகளில் தொடர்புடையதாக என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் பகுதியில் 4 இடங்கள், கர்நாடகா மாநிலத்தில் மைசூர் உட்பட மொத்தம் நேற்று என்ஐஏ அதிகாரிகள் 40 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், தமிழ்நாட்டில் மட்டும் பென் டிரைவ், ஹார்ட்டிஸ்க், செல்போன்கள், பென்டிரைவ்கள் என ஏராளமான டிஜிட்டல் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சோதனையின் இடையே கணக்கில் வராத ரூ.4 லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நேற்று நடந்த சோதனையில் 2 பேரை விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் 2 வழக்குகள் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 40 இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : NIA ,Tamil Nadu, Kerala, Karnataka ,Coimbatore , In 40 places, NIA raids, Coimbatore, car cylinder explosion, action in the case
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!