×

வீடு காலி செய்துவிட்டு செல்வதாக நாடகம் நடத்தி லோடு வேனில் 20 கிலோ கஞ்சா கடத்திய போலி நிருபர்கள் 2 பேர் அதிரடி கைது: கார், வேன், போலி ஐடி கார்டுகள் பறிமுதல்; போலீசார் தீவிர விசாரணை

சென்னை: வீட்டை காலி செய்வதாக கூறி வேனில் குண்டான், சமையல் சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்களுடன் கஞ்சா கடத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை போரூர் சுற்று வட்டார பகுதிகளில், வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போரூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா கடத்தி வந்த சூர்யா (30), பிரவீன் (29) ஆகிய இரு போலி நிருபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போரூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கஞ்சா கடத்தலுக்கு தலைவனாக திருவேற்காட்டை சேர்ந்த வினோத் குமார்(37)  செயல்பட்டு வந்ததாக தெரியவந்தது. இவர் ஒரு புலனாய்வு பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்வதாகவும், ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த வினோத்குமார் அவரது கூட்டாளிகள் தேவராஜ், பாலாஜி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள், லோடு வேன், 2 கார்கள், 4 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து நேற்று போரூர் காவல் நிலையத்தில், ஆவடி போலீஸ் துணை ஆணையர்  பாஸ்கரன் பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சா, இரண்டு கார்கள், வீட்டு உபயோக பொருட்களை காலி செய்து எடுத்து செல்வது போல் வடிவமைத்து வைத்திருந்த லோடு வேன் ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போலீசாரின் நடவடிக்கையால் பல இடங்களில் போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பத்திரிகையாளர்கள் வெளியே சர்வசாதாரணமாக வெளியே வந்து செல்வதை அறிந்து கொண்ட வினோத் குமார் புலனாய்வு பத்திரிகை ஒன்றை ஆரம்பித்து அதன் ஆசிரியராக இருந்து கொண்டு  கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார். பத்திரிகையாளர் என்பதால் போலீசாரை சுலபமாக ஏமாற்றி வந்துள்ளார். ரயில் மூலம் கஞ்சா எடுத்து வருவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு மாற்றாக புதிதாக லோடு வேன் ஒன்றை வாங்கி அதில் வீட்டை காலி செய்து பொருட்களை எடுத்து செல்வது போல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் அந்த வாகனத்தில் வைத்து கைது செய்த வினோத்குமார், அந்த லோடு வேனில் ஆந்திராவிற்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளார்.  

போலீசார் மடக்கினால் பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஏமாற்றிவிட்டு சென்று வந்தது தெரியவந்தது. இவரிடம் இருந்து இரண்டு கார்கள், 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள், வேன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்குகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இவரது உறவினர்கள் யாராவது இந்த கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மேலும் அவருடன் தொடர்புடையவர்களின் வங்கி கணக்குகளையும் பரிசோதனை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : 2 fake reporters who pretended to vacate the house and smuggled 20 kg of ganja in a loaded van arrested: car, van, fake ID cards seized; Police are actively investigating
× RELATED குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி...