×

பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை அடையாறு ஆற்றின் குறுக்கே இன்று சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்: 100 நாளில் பணிகளை முடிக்க திட்டம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2வது கட்டமாக ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி, 3வது வழித்தடமான மாதவரம் முதல் சிப்காட் வரை 45.8 கி.மீ நீளத்திற்கும், 4வது வழித்தடத்தடமான கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் 5வது வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்திற்கு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த 5வது மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் பசுமை வழிச்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ள பகுதியில் சுரங்க ரயில் நிலையத்துக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் அடையாறு ஆற்றில் 6 மீட்டர் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் மிதவை படகில் இயந்திரங்கள் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் பசுமை வழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்க 2 சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்தது. இதை தொடர்ந்து சுரங்கம் தோண்டுவதற்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதால் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்கப்படுகிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு ‘காவேரி’ என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள அடையாறு ஆற்றின் குறுக்கே நாள் ஒன்றுக்கு 10 மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டப்படும். இந்த பணிகளை 100 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் முதற்கட்டமாக மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Adyar River ,Green Corridor ,Adyar Junction , Tunneling across Adyar River from Green Corridor to Adyar Junction begins today: Plan to complete work in 100 days
× RELATED அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி...