திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த முத்திரைதாள் குறைவு கட்டண வசூல் முகாமில் ரூ.1.33 கோடி வருவாய்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், முத்திரைதாள் குறைவு கட்டணம் வசூல் செய்யும் முகாமில், ரூ.1.33 கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், தினமும் 100க்கும் மேற்பட்ட நில ஆவண பதிவு செய்யப்படுகிறது. அப்போது, குறிப்பிட்ட தொகை முத்திரைதாள் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், ஒரு சில உரிமையாளர்கள் பதிவின்போது முத்திரை தாள் நிர்ணய கட்டணம் குறைவாக செலுத்தி ஆவண பதிவு செய்து விடுவார்கள். இவ்வாறு குறைவான கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணம் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். இதனால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, குறைவு முத்திரைதாள் கட்டணத்தை செலுத்திய பின் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ஆவணங்கள் விடுவிக்கப்படும்.

இந்த நடைமுறையால் பொதுமக்கள் நேரம் விரயமும், அலைச்சலும் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். இந்நிலையில், திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படாமல் கிடப்பில் இருந்தது. இதையடுத்து, பொதுமக்களின் சிரமத்தை போக்க பத்திர பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து குறைவு முத்திரைதாள் கட்டணம் வசூல் செய்யும் முகாம் திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமில், முத்திரைத்தாள் மாவட்ட வருவாய் அலுவலர் சாரதா ருக்மணி தலைமை வகித்தார். பதிவுத்துறை துணை தலைவர் சேகர், மாவட்ட பதிவாளர் சுபிதாலட்சுமி, சிறப்பு வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், சார் பதிவாளர் காமராஜ் ஆகியோருடன் 10 பேர் கொண்ட குழுவினர் முகாமில் பங்கேற்று 160 ஆவணங்களுக்கு, ரூ.1 கோடியே 33 லட்சம் குறைவு முத்திரைதாள் கட்டணம் வசூல் செய்து ஆவணங்களை விடுவித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு வழங்கினர்.

Related Stories: