நம்பர் 1...நம்பர் 1...நம்பர் 1...! ஐசிசி தரவரிசையில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முதல் இடம் பிடித்தது இந்திய அணி

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இதன்மூலம் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், டெல்லியில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில் இன்று ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள உலக கிரிக்கெட் அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் நம்பர் 1 அணியாக இந்திய அணி உள்ளது. ரோஹித் சர்மா, பாண்டியா, பிசிசிஐ என இந்திய கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்க்கும் இந்தச் செய்தியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது அணிகளின் தரவரிசையில் இந்திய அணி டி20 (267 புள்ளி), ஒருநாள் (114 புள்ளி) மற்றும் டெஸ்ட்டில் (115 புள்ளி) என முதல் இடத்தில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியிடம் அடைந்த தோல்வியின் காரணமாக ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 106 புள்ளி, நியூசிலாந்து 100 புள்ளி, தென் ஆப்பிரிக்கா 100 புள்ளி அணிகள் 3 முதல் 5 இடங்களில் உள்ளன.

Related Stories: