×

நாளுக்கு நாள் குறைந்து வரும் பாபநாசம் அணையின் நீர்மட்டம்; ஆறுதல் அளிக்கும் மணிமுத்தாறு அணை: மழை கைவிட்டதால் விவசாயிகள் கவலை

நெல்லை: வடகிழக்கு பருவமழை காலத்தில் போதிய மழை இல்லாததால், பாபநாசம் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. எனினும் மழை கை விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில வடகிழக்கு பருவமழையும் கிடைத்து வருகிறது. எனினும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்புவது வழக்கம்.

அணைகள் நிரம்பி மறுகால் பாய்ந்தால் தான் குளங்களில் தண்ணீர் பெருகும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பவில்லை. இந்நிலையில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு பாபநாசம் அணை திறக்கப்பட்டது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி, 70.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 215 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 904 கன அடி தண்ணீர் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 75.52 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 97 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 310 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பிசான பருவ நெல் சாகுபடியை பொறுத்தவரை வருகிற மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கும்.

இதனால் அதுவரை பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாய தேவைக்கு தண்ணீர் வழங்க வேண்டும். எனவே பாபநாசம் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகும். இந்த மாதங்களில் குடிநீர் தேவைக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் தேவைப்படும். பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்தாலும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. எனவே கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க மணிமுத்தாறு அணை கை கொடுக்கும் என நம்பப்படுகிறது.

முன் கார் சாகுபடி நடக்குமா?
பிசான நெல் அறுவடை முடிந்த பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தில் முன் கார் சாகுபடி நடப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு பாபநாசம் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், குடிநீர் பிரச்னையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே முன் கார் சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோடை மழை மீது நம்பிக்கை
ஏப்ரல், மே மாதங்கள் கோ டை காலம் என்ற போதிலும் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கோடை மழை பெய்வது வழக்கம். எனவே கோடை காலத்தில் மழை பெய்யும் பட்சத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் அணைக்கு நீர் வரத்து இருக்கும். வடகிழக்கு பருவமழை கை விட்ட நிலையில் இந்த ஆண்டு கோடை மழை கை கொடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags : Babanasam Dam ,Manimutharam Dam , The water level of Papanasam Dam which is decreasing day by day; Manimuthar Dam brings comfort: Farmers worry as rains stop
× RELATED பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்