பாப்பாக்குடி: நெல் லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள கிராமம் பனையன்குறிச்சி. இந்த கிராமத்தின் தென்பகுதியில் காட்டுப்பகுதியாக இருப்பதால் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. பனையன்குறிச்சியைச் சேர்ந்த மெய்யப்பன் என்பவருக்கு அங்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இங்கு சப்போட்டா, மா, தென்னை மரங்கள் வளர்த்து வருகிறார். மேலும் செயற்கை முறையில் தேன் தயாரிக்க கூண்டும் வைத்துள்ளார்.
பனையன்குறிச்சி, கபாலிபாறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள பனையன்குறிச்சி காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று மெய்யப்பன் தோட்டத்தில் புகுந்து கூண்டுகளை உடைத்து தேனை சுவைத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கபாலிபாறையைச் சேர்ந்த மணி மகன் சுந்தர் (30) என்பவர் பனையன்குறிச்சி காட்டுப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது மெய்யப்பன் தோட்டத்தின் அருகே புதரில் பதுங்கி இருந்த கரடி திடீரென வெளிப்பட்டு சுந்தரை விரட்ட தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தோட்ட வேலிகளை தாண்டி தலைதெறிக்க ஓடி உயிர் தப்பினார்.
இதில் அவருக்கு கால் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. ஆடு மேய்க்கும் தொழிலாளியை கரடி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நெல்லை மாவட்ட வனவர் முருகன் உத்தரவின்பேரில் நெல்லை வனச்சரகர் சரவணக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மெய்யப்பன் தோட்டத்தை பார்வையிட்டனர்.
அங்கு தேன் கூடுகள் உடைக்கப்பட்டிருந்தது. வனத்துறையினரிடம் கிராம மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து பனையன்குறிச்சி பகுதியில் நேற்று வனச்சரகர் செந்தில்முருகன், வனவர் சங்கர்ராஜா, மதியழகன், டென்சிங், வன கால்நடை மருத்துவர் மனோகரன், ஆய்வாளர் அர்னால்டு உள்ளிட்ட வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைக்கும் பணியில் ஈடுபட்டனர். கூண்டில் கரடிக்கு பிடித்தமான சுட்ட பனம்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், நெய் உள்ளிட்டவற்றை வைத்துள்ளனர்.