×

காதலர் தினத்தையொட்டி ஊட்டி பூங்காக்களில் குவிந்த காதல் ஜோடி

ஊட்டி: காதலர் தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டியிலும் ஆண்டு தோறும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும். இங்குள்ள சில நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். இதில், ஏராளமான ஜோடிகள் கலந்துக் கொள்வார்கள்.

வெளி நாடுகள் மற்றும்  வெளிமாநிலங்களை சேர்ந்த காதல் ஜோடிகள் கலந்து கொள்வதும் வாடிக்கை. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு மற்றும் வட மாநில  சுற்றுலா பயணிகள் அதிகளவு வராத நிலையில், நட்சத்திர ஓட்டல்களில் சிறப்பு  நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படவில்லை. இந்த முறையும் ஒரு சில ஓட்டல்கள் தவிர பெரும்பாலான ஓட்டல்களில் காதலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

அதேசமயம், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, பைக்காரா நீர் வீழ்ச்சி, தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களில் ஏராளமான ஜோடிகள் வலம் வந்தன. காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று ஊட்டியில் உள்ள ரோஜா மலர் விற்பனை  நிலையங்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் கிப்ட் ஷாப்களில் இளவட்டங்களின் கூட்டம் அலை மோதியது. காதலர் தினத்தை முன்னிட்டு பூங்கா மற்றும் சுற்றுலா  தலங்களுக்கு வருபவர்கள் அத்து மீறாமல் இருக்கவும்,

அதே சமயம் பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாத வண்ணம், பாதுகாப்பு பணிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

Tags : Ooty Parks ,Valentine ,Day , Romantic couple thronged Ooty Parks on Valentine's Day
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...