×

சின்னமனூர் அருகே நெல் விவசாயம் பாதிப்பு; விதையின் தரம், முளைப்பு திறனை அறிந்து பயிரிட்டால் மகசூல் அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண்துறையினர் ‘அட்வைஸ்’

சின்னமனூர்: தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. குறிப்பாக மாவட்டத்தில் அதிகளவில் நெல் விவசாயம் நடக்கிறது. சின்னமனூர் பகுதியில் வேம்படிகளம், முத்துலாபுரம் பிரிவு, கருங்கட்டான் குளம் பரவு ,பெருமாள் கோயில் பரவு, உடைய குளம் பரவு, செங்குளம் பரவு, மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4000 ஏக்கர் அளவில் வருடம் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பெரியார் பாசனமே பிரதானமாக இருப்பதால் இருபோக நெல் சாகுபடி அமோகமாக நடந்து வருகிறது.வழக்கம் போல ஜூன் முதல் தேதியில் இருபோகம் நெல் சாகுபடி தொடர் விவசாயத்திற்கு பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்படும். அதன் அடிப்படையில் கடந்த முதல் போகத்திற்கு 509 ரகத்தைப் பயிரிட்டு நல்ல மகசூலை கண்டு விவசாயிகள் ஓரளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டினர். இதனை அடுத்து கடந்த நவம்பர் 2வது வாரத்தில் மறுபடியும் இரண்டாம் போகமான சம்பா பருவத்தில் நடவு செய்து தொடர்ந்து தற்போது 80 நாட்களைக் கடந்து நெற்கதிர்களை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பரவில் 606 ரகத்தினை முழுமையாக நடவு செய்து நெல் நாற்றுக்களை வளர்த்து தற்போது 80 நாள் நெற்கதிர்களாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் இந்த 606 ரகம் விதைத் திறன் இல்லாமல் வளர்ந்துள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சண்டாகி நிற்கிறது. அதாவது, உள்ளே கதிருக்குள் நெல் இல்லாமல் வெறும் சாவியான கதிர்களாக மாறி கிடக்கிறது. 110 நாட்கள் வளர்த்தெடுத்தாலும் வீண் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொதுவாக ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் கிடைக்கும் நிலையில், சண்டாகி போன காரணத்தால் 10 முதல் 15 மூட்டைகள் கிடைப்பதே மிகவும் அரிது என விவசாயிகள் கூறுகின்றனர்.

முன்னோடி விவசாயி தெய்வேந்திரன் கூறுகையில், ‘‘பருவநிலை மாற்றத்தால் சீதோஷண நிலை சீர்குலைந்துள்ளதால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விதை தேர்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நெல் நடவுக்கு முன் மண்பரிசோனையும் அவசியம்.’’ என்றார்.
இதுதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: ேதனி மாவட்ட விவசாயிகள் விதைகளில் உள்ள தரங்களை நன்கு அறிந்து பயிரிட வேண்டும். விதையின் தரம் நான்கு முக்கிய காரணிகளை அடிப்படையாக கொண்டது.

புறத்தூய்மை முளைப்பு திறன், ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகும். விதையின் புறத்தூய்மை என்பது விதைகளில் கலந்து உள்ள கல், மண், தூசி, முதிர்ச்சி அடையாத விதைகள் மற்றும் விதைகளின் உடைந்த பாகங்களை குறிக்கும். இந்த பொருட்கள் விதைகளில் அதிகளவு கலந்து இருந்தால் விதைகளின் தரம் பாதிக்கப்படும். எனவே விதைகளை புறத்தூய்மை செய்து விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும். பொதுவாக விதையின் புறத்தூய்மை 98 சதவீதம் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் தரமற்ற விதை ஆகும்.

விதைகளின் ஈரப்பதமானது விதை முளைப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை அதிக ஈரப்பதத்துடன் சேமிக்கும் போது பாக்டீரியா, பூஞ்சாணம் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இதன்மூலம் விதையின் தரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே விவசாயிகள் விதைப்பிற்கு அல்லது சேமிப்பதற்கு முன்பாக தங்களிடம் உள்ள விதையின் ஈரப்பதத்தை கண்டறிவது அவசியம். பொதுவாக நெல்லிற்கு 13 சதவீதம், சோளத்திற்கு 12 சதவீதம், பயிறு வகை பயிர்களுக்கு 9 சதவீதம், காய்கறிகளுக்கு 7 சதவீதம் இருத்தல் வேண்டும்.

முனைப்பு திறன் என்பது மிக முக்கிய காரணியாக கருதப்படுகிறது. பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரித்து அதிக மகசூலை பெற முளைப்பு திறன் அவசியம். ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்பு திறனானது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நெல்லிற்கு 80 சதவீதம், பயிறு வகை பயிர்களுக்கு 75 சதவீதம், கத்தரி, தக்காளி, கீரை வகைகளுக்கு 70 சதவீதம் பாகல், சுரை, பூசணிக்கு 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அவை தரம் குறைவான விதையாகும்.

பிறரக கலவன் என்பது ஒரே பயிரை சேர்ந்த வேறு ரக விதைகள் கலந்து இருப்பது ஆகும். பயிர் வகை பயிர்களுக்கு ஒரு கிலோவிற்கு பத்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலான பிற கலவன் இருந்தால் அவற்றின் தரம் குறைவானதாக கருதப்படும். பிற கலவன் இல்லாத விதைகளை தேர்வு செய்து விதைப்பதன் மூலம் விதையின் தரத்தை மேம்படுத்தலாம். எனவே விவசாயிகள் தங்களின் விதையின் தரத்தினை பரிசோதனை மூலம் அறிந்து விவசாயம் செய்து பயனடையலாம்’’ என்றனர்.

Tags : Chinnamanur , Damage to paddy cultivation near Chinnamanur; If you know the quality of the seed, the germination capacity, you can reap the yield: Agriculture department 'advice' to the farmers
× RELATED கடன் பிரச்னையில் பார் ஊழியர் மனைவி, மகனுடன் தற்கொலை