×

சிக்கல் தீர்ந்தது!: CUET நுழைவுத் தேர்வு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கம்..!!

சென்னை: CUET நுழைவுத் தேர்வு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கப்பட்டது. படிவத்தில் மாணவர்கள் மற்ற பகுதிகளை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வு கண்காணிப்பாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இதே நடைமுறை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதற்கான CUET-UG நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. CUET தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. 2021ல் கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று தரப்படவில்லை.

இதனிடையே, மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் என்பதால் CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருந்தது. மார்ச் 12ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதால் தமிழ்நாடு அரசு தலையிட்டு விலக்கு பெற்று தர மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், CUET நுழைவுத் தேர்வு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மூலம் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர CUET நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.


Tags : Tamilnadu ,CUET , CUET Entrance Test, Tamil Nadu Students, 10th Class Marks
× RELATED வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின்...