×

விழுப்புரம் அருகே மனநலம் குன்றியோருக்கு பாலியல் வன்கொடுமை: தனியார் காப்பகத்திற்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்தரவதை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதரவற்றோர் இல்லத்திற்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குண்டலபுலியூரில் உள்ள இயங்கி வந்த அன்பு ஜோதி என்று ஆதரவற்ற இல்லத்தில் மனநலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வந்தனர். அங்கு இருந்த சிலர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

உரிய அனுமதியின்றி இயங்கி வந்த ஆஷ்ரமத்தில் 16 பேரை காணவில்லை என்றும், அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. அங்கிருந்தவர்கள் சித்தரவதை செய்யப்பட்டதுடன் வியாபார நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 6 பேர் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்த போலீசார் சிகிச்சையில் உள்ள ஆஷ்ரமம் நிர்வாகி மற்றும் அவரது மனைவியை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே ஆஷ்ரமத்தில் இருந்து மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் ஒரு குழந்தை, 33 பெண்கள் உள்ளிட்ட 143 பேரை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பழனி; சம்மந்தப்பட்ட ஆதரவற்ற இல்லத்தை மூடி சீல் வைக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களில் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை முடிந்த பின்பு அருகில் உள்ள வேறு காப்பகங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. விரும்பியவர்கள் பெற்றோர் அல்லது உறவினருடன் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.


Tags : Vilappuram , Vigilance, mental health, sexuality, violence, archive, seal
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது