சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் திருவொற்றியூர் மயானம் சீரமைப்பு

திருவொற்றியூர்: சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், திருவொற்றியூர் மயானம் முழுவதும் உள்ள செடி, கொடிகளை அகற்றி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவொற்றியூர் மண்டலம், 9வது வார்டுக்கு உட்பட்ட பட்டினத்தார் கோயில் தெரு அருகேயுள்ள மாநகராட்சி மயானத்தில் ஆங்காங்கே செடிகளும், கொடிகளும் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால், சடலங்களை அடக்கம் செய்ய வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், மயானத்தை சீரமைக்கவும், கூடுதலாக மின் மயானம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசுவிடம்  கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.41 கோடி செலவில் நவீன எரியூட்டு தகன மேடை அமைக்க திட்டமிடப்பட்டு, கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த புதிய நவீன எரியூட்டு தகனமேடை கட்டுமான பணிக்காகவும், உடலை அடக்கம் செய்வதற்காகவும் மயானம் முழுவதும் உள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியை மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு முன்னிலையில், மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டனர். அப்போது, புதிய நவீன எரியூட்டு தகனமேடை கட்டுமான பணி முடிந்ததும், எஞ்சியுள்ள பகுதிகள் அனைத்தும் மயான பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல குழு தலைவர் தெரிவித்தார்.

Related Stories: