9 கிலோ தங்கம் கொள்ளையில் குற்றவாளிகளை பிடிக்க 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் வெளிமாநிலம் விரைந்தது தனிப்படை: கமிஷனர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் நபரும், ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று வேப்பேரி சிக்னலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு, சென்னையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்த வாகன ஓட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.பின்னர், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டும் நபர்கள் 85% உயர்ந்துள்ளது. அதேபோல், பைக்கில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்கள் நபர்களின் எண்ணிக்கை 13% உள்ளது. கடந்த ஆண்டு நடந்த 50% விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் தான் இறந்துள்ளனர். இதனால், பைக் ஓட்டுனர் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி இருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளோம். அந்த வகையில் மாநகரம் முழுவதும் 5,600 பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளோம். பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில், ஆதாரங்கள் கிடைத்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க ஏற்கனவே 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் ஒரு இணை கமிஷனர் மேற்பார்வையில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் செயல்படுகிறது.

மேலும், 3 உதவி கமிஷனர்கள் கொண்ட தனிப்படை வெளிமாநிலத்துக்கு சென்றுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் கர்நாடகாவில் தனிப்படை போலீசார் சந்தேகப்படும் படியாக ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் விஜிலாபுரம் மாவட்டத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்ற நபர்களில் இவரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. பெரம்பூரில் எப்படி ஷட்டரை அறுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களோ அதேபோன்று அந்த பகுதியிலும் ஈடுபட முயன்றபோது அலாரம் அடித்ததில் அவர்கள் தப்பியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: