×

பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை நாளை முதல் சுரங்கம் தோண்டும் பணி

* அடையாறு ஆற்றின் கீழ் தினமும் 10 மீட்டர் தோண்டப்படும்
*  சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என பெயர்

சென்னை: பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி நாளை தொடங்கப்பட்டு 100 நாட்களுக்குள் பணி நிறைவடையும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 2வது கட்டமாக ரூ.63.246  கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னையில் முதல் கட்டத்தை தொடர்ந்து தற்போது போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக வழித்தடம் 3ல் மாதவரம் முதல் சிப்காட் வரை 45.8 கி.மீ நீளத்திற்கும், வழித்தடம் 4ல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கும், வழித்தடம் 5ல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள், 48 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் என மொத்தம் 128 ரயில் நிலையங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் 2ம் கட்ட திட்டத்தில் உயர்மட்ட தூண்கள், சுரங்கம் தோண்டும் பணி, ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்கள் அமைத்தல் பணிகள் ஆங்காங்கே இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பசுமை வழிச்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ள பகுதியில் சுரங்க ரயில் நிலையத்துக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் அடையாறு ஆற்றில் 6 மீட்டர் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் மிதவை படகில் இயந்திரங்கள் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண்பரிசோதனை செய்யும் பணியும் ஏற்கனவே முடிந்துள்ளது.

இந்நிலையில் பசுமை வழிச்சாலை  மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்க  2 சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்தது. சுரங்கம் தோண்டுவதற்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ள நிலையில் நாளை சுரங்கம் தோண்டும் பணி தொடங்குகிறது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு ‘காவேரி’ என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள அடையாறு ஆற்றின் அடியில் நாள் ஒன்றுக்கு 10 மீட்டர் சுரங்கம் தோண்டப்படும். அதனை தொடர்ந்து 100 நாட்களுக்குள் ஆற்றின் அடிப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும். இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் முதற்கட்டமாக மாதவரத்தில் சுரங்கம் தோன்றும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Green Way ,Junction , Green Corridor, Adyar Junction, Mining, Work
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...