சென்னை: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 2 அடி அதிகரிக்க, அதன் மண் தன்மை குறித்து, ஆராய்ச்சி பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் கட்டுமானப் பணி கடந்த 1940ல் தொடங்கி 1944ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது, 8,458 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 35 அடி உயரம், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இதில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ஆர். ஆகியோர் கிருஷ்ணா நதி நீர் பெற ஒப்பந்தம் செய்தனர். ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை 152 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ள 25 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்க 13 ஆண்டுகள் ஆனது. குடிநீர் வழங்கும் நீர் ஆண்டாக ஜூலை முதல் ஜூன் வரை கணக்கின்படி 2 தவணைகளாக குடிநீர் திறப்பது என ஒப்பந்தமானது. இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு வரை 4 முறை மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 2015ல் ஒரு லட்சம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அதிகளவில் பெய்ததால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரிநீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் சென்று கலந்தது. எனவே, இதனை தடுக்கும் வகையில் நீர் இருப்பை உயர்த்தவும், நீர்த்தேக்கத்தின் கரையை பலப்படுத்தவும், நீர்த்தேக்கத்தின் உயரத்தை 2 அடி அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால், நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு கடலில் வீணாக கலந்தது. இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.
அப்போது நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பூண்டி நீர்த்தேக்கத்தை 2 அடி உயர்த்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்’’ என்றார். இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பூண்டி நீர்த்தேக்கத்தை 2 அடி உயர்த்துவதற்காக அரசாணையும் வெளியிட்டது. ஏற்கனவே, நீர்த்தேக்கத்தில் 3,231 மில்லியன் கன அடி நீர் சேமித்து வைக்கக்கூடிய வகையில் பூண்டி நீர்த்தேக்கம் இருப்பதால், மேலும் 1.5 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க ஏதுவாக நீர்த்தேக்கத்தை மேலும் 2 அடி உயரம் அதிகரிப்பதற்காக தீவிரமாக நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், நீர்த்தேக்கத்தை 2 அடி உயரம் உயர்த்துவதற்காக கரையின் வெளிப்பகுதியில் கரையின் கீழ் மண் தன்மை குறித்தும் மற்றும் கரையின் மேல் பகுதியில் மண் தன்மை குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து மண் தன்மை குறித்து ஆராய்ச்சி பணிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.
முதல்கட்டமாக, வேலூர் நீர்வளத்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளர் குமரன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் வாசிலிங்கம், உதவி பொறியாளர் கலையரசி மற்றும் சென்னை, தரமணி மண் தன்மை ஆராய்ச்சியாளர்கள் பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றி 6 இடங்களில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து மண் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முன்னதாக இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் ஷட்டர்களை ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கனவே நீர்த்தேக்கம் 35 அடி உயரம் உள்ள நிலையில், மேலும் 2 அடி உயர்த்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
