×

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடக்கம்: இன்ஸ்பெக்டர், உறவினர்கள் சாட்சி அளித்தனர்

சென்னை: மயிலாப்பூர் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கொலை வழக்கில் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது.  மயிலாப்பூர் பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆடிட்டர் காந்த் (60). இவரது மனைவி அனுராதா. இவர்களுடைய மகள் சுனந்தா, மகன் சஸ்வத் அமெரிக்காவில் உள்ளனர். ஸ்ரீகாந்த் திறமையான ஆடிட்டர் என்பதால் பல தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கணக்குகளை ஆடிட்டிங் செய்து வந்தார்.  

இதுதவிர அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ‘இன்பீம்’ என்ற பெயரில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றும் நடத்தி வந்தார். தனது மனைவி அனுராதாவுடன் விமானத்தில் அமெரிக்காவில் இருந்து கடந்த ஆண்டு மே 7ம் தேதி ஆடிட்டர் வந்தார். வீட்டிற்கு வந்த இருவரையும் அவர்களின் கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவிராய் ஆகியோர் கொலை செய்து சூளேரிக்காட்டில் உள்ள காந்தின் பண்ணை வீட்டில் ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் புதைத்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காரில் தப்பி விட்டனர்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய மயிலாப்பூர் போலீசார் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரை ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், கொலை செய்யப்பட்ட  ஆடிட்டர் ஸ்ரீகாந்த் 40 கோடி ரூபாய் பூர்வீக சொத்தை விற்றதாக காரில் செல்லும் போது பேசியுள்ளார். அதன் பிறகு அவர் அமெரிக்கா சென்று விட்டார். 40 கோடி ரூபாய் பணம் மயிலாப்பூர் வீட்டில் இருப்பதாக நம்பிய ஓட்டுநர் கிருஷ்ணா கொலை திட்டத்தை தீட்டி  அதன்படி அமெரிக்காவிலிருந்து அவர்கள் வந்ததும், தம்பதி இருவரையும் நண்பன் ரவிராயுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கு சென்னை 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், வழக்கின் சாட்சி விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது. கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் டி.ரவிக்குமார் சாட்சிகளிடம் விசாரணையை தொடங்கினார். இதுவரை பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார்தாரர் ரமேஷ், ஆடிட்டர் மகனின் நண்பர் ஸ்ரீநாத், பக்கத்து வீட்டுக்காரர் ராஜா, சித்தப்பா சண்முகம் ஆகியோர் சாட்சியளித்தனர். அவர்களை குற்றம்சாட்டப்பட்ட ரவிராயின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். இதையடுத்து, அடுத்த சாட்சி விசாரணையை நீதிபதி வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Tags : Sessions court ,Mylapore , Mylapore, Double murder, Court of Sessions, Examination of witness, Commencement
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்