×

சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டி: இந்தியா - நேபாளம் இன்று மோதல்

சென்னை: இந்தியா - நேபாளம் மகளிர் அணிகள் மோதும் நட்பு நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிகள் சென்னையில்  இன்றும், பிப்.18ம் தேதியும் நடைபெற உள்ளன. இது குறித்து தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின்  துணைத் தலைவர் சுரேஷ் ஜே மனோகரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, தமிழ்நாடு கால்பந்து சங்கம், தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையம் இணைந்து சர்வதேச அளவிலான நட்புறவு  கால்பந்து போட்டியை சென்னையில் நடத்த உள்ளோம்.  இந்திய, நேபாள மகளிர்  அணிகள் மோதும் இப்போட்டிகள்   பிப்.15, 18  தேதிகளில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில்  நடைபெறும். மாலை 6.30க்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும் இப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம். இந்தப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில்,  தமிழக வீராங்கனைகள் 4பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 6 தமிழக வீராங்கனைகள் தேசிய அணியில் இருந்தனர். இப்போது 2 பேர் காயம் காரணமாக அணியில் இடம் பெற்றவில்லை.

சர்வதேச அளவிலான கால்பந்து போட்டி  15 ஆண்டுகளுக்கு பிறகு  சென்னையில் நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின்போது   இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். அவர் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு, விளையாட்டு உலகத்தையே தமிழ்நாடு பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அனைத்து விளையாட்டுகளின் மேம்பாட்டுக்கும் தனிக் கவனம் செலுத்தி,  விளையாட்டு என்றாலே நம்பர் ஒன் தமிழ்நாடு தான் என்ற நிலைமையை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

அவரது முயற்சியின் விளைவாகவே இந்த ஆட்டங்களை சென்னையில் நடத்தும் வாய்ப்பு நமக்கு கிடைத்து இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை  ஊக்குவிக்க, மேம்படுத்த   கால்பந்து ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த 2 நாட்களும் அரங்கத்துக்கு திரளாக வந்திருந்து நமது வீராங்கனைகளை உற்சாகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சுரேஷ் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது,  தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின்  துணைத் தலைவர் ரவிகுமார், பொருளாளர்  ராஜசேகரன், காஞ்சி மாவட்டத் தலைவர் ராபர்ட் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் தாமஸ் டெனர்பி (ஸ்வீடன்),  இந்திய அணியின் முன்னணி வீராங்கனை இந்துமதி கதிரேசன் ஆகியோரும்  கலந்துகொண்டனர்.



Tags : Chennai ,India ,Nepal , International football match after 15 years in Chennai: India-Nepal clash today
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்