×

ஜிம்பாப்வேயுடன் 2வது டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

புலவாயோ: ஜிம்பாப்வே அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 4 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் புலவாயோவில் கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. டாஸ் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 115 ரன்னுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் குடகேஷ் மோத்தி 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 292 ரன் குவித்து ஆல் அவுட்டானது (ரோஸ்டன் சேஸ் 70, ரேமன் ரீபர் 53, ஜோஷுவா 44, சந்தர்பால் 36, கைல் மேயர்ஸ் 30, பிளாக்வுட் 22 ரன் விளாசினர்.

இதையடுத்து, 177 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஜிம்பாப்வே அணி மீண்டும் குடகேஷ் சுழலை சமாளிக்க முடியாமல் 173 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் மற்றும் 4 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. கடுமையாகப் போராடிய தொடக்க வீரர் இன்னொசென்ட் கையா 43 ரன், கேப்டன் கிரெய்க் எர்வின் 72 ரன், பிராண்டன் மவுடா 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் குடகேஷ் 6 விக்கெட் (17.3-1-62-6), ஜோசப், கேப்ரியல், ஹோல்டர், சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. குடகேஷ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.




Tags : West Indies ,Zimbabwe , Zimbabwe, 2nd Test, West Indies, win
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது