×

அண்ணா பல்கலைக்கழக வளாகம் அருகில் அப்துல் கலாம் திருவுருவச் சிலை அமைக்கப்படும்: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தகவல்

சென்னை: சென்னை, தரமணி, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின், (Apollo Proton Cancer Centre) புதிய புரோட்டான் சிகிச்சை பிரிவில் (New Proton Therapy Room), இன்று (14.02.2023) செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் “டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சிகிச்சை பகுதியையும்” (Dr APJ Abdul Kalam Therapy Bay), தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் மிகப்பெரிய புரோட்டான் சிகிச்சை திட்டத்தையும் (The Largest Proton Beam Therapy Program in South Asia & Middle East) திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

செய்தித் துறை அமைச்சர் சிறப்புரை;
அப்பல்லோ மருத்துவனையின் சார்பில் ஒரு முயற்சி எடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி அதிலே வெற்றியும் அடைந்து, புதிதாக புற்று நோயை குணப்படுத்துகின்ற வகையில் இன்றைக்கு கேன்சருக்கான நவீன இயந்திரங்களுடன் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து, மருத்துவத் துறையில் இன்றைக்கு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி மக்களை நோய்நொடியிலிருந்து காப்பாற்றி வருகிறார். குறிப்பாக முதலமைச்சர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் முதலமைச்சராக பொறுப்பேற்றபொழுது, கொரோனா தொற்று என்கிற ஒரு சூழ்நிலை இருந்தது. முதலமைச்சரும், அமைச்சர்களும் பொறுப்பேற்ற விழா மிக எளிமையாக நடைபெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கொரோனா நோய் தாக்கம் என்பது எந்த அளவுக்கு மக்களுடைய இயல்பு வாழ்க்கையையும், உடல் நலத்தையும் பாதித்தது. அதிலிருந்து மீண்டு வரவேண்டிய ஒரு சூழ்நிலையில்,  முதலமைச்சரின் உறுதியான, கடுமையான நடவடிக்கை காரணமாக விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. பொது மக்களிடம் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்ச்சியும், அதே நேரத்தில் மருத்துவத் துறையில் கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டது. முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் பணிகளில் தான் முதலில் ஈடுபட்டோம்.

தமிழ்நாட்டில் இன்றைக்கு மருத்துவத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மக்களைத் தேடி மருத்துவம் திட்டமனது, வீட்டிற்கே மருத்துவம் கொண்டுபோய் சேர்த்த ஒரு சிறப்பான, புரட்சிகரமான திட்டமாகும். இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய வகையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் தனியார் மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை மேற்கொள்ளுகின்ற வகையில் கொண்டு வந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போல, இன்னுயிர் காப்போம் நம்மைக் காப்போம் 48 திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டம் மூலம் சாலையோரத்தில் அடிப்பட்டவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் பிற உதவிகள் கிடைத்தாலும், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் விபத்தில் அடிபட்டவர்களுக்கு பாதுகாப்பாக, உதவியாக இருக்கக்கூடியவர்கள் போய் அந்த மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதிக்கக்கூடியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியும், அது மட்டுமல்லாமல் 48 மணி நேரத்திற்குள் விபத்தில் அடிபட்டவர்களுக்கான சிகிச்சை செலவையும் அரசு ஏற்றுக் கொள்கிற சிறப்பான திட்டமாகும். இப்படி பல்வேறு திட்டங்களை இன்றைக்கு சிறப்பாக செயல்படுத்துவதோடு, ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் ஊர்தியை ஏற்படுத்தி அதில் மருத்துவர், இரண்டு செவிலியர்கள், பல்வேறு கருவிகள் உள்ளடக்கிய வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலன்ஸ் வேன் கிராமங்களில் திட்டமிட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்பாடு செய்து ஒவ்வொரு பகுதியாக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, அங்கே நேரில் சென்று பொது மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இன்றைக்கு பல்வேறு திட்டகளை மருத்துவத் துறையில் செயல்படுத்தி வருகின்றார்கள். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சமீபத்தில் ஜப்பான் நாட்டுக்குச் சென்று புற்றுநோய்க்குக் அங்கே அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொண்டு வந்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை இன்றைக்கு இந்தத் திட்டத்தை துவங்குகிற நேரமாக அமைச்சர் அதற்கான முயற்சியையும், முன்னெடுப்பையும் எடுத்திருக்கின்றார்.

மேற்கு மண்டலத்திலேயே ஒரு சிறப்பான மருத்துவனை துவங்குவதற்கான பணிகள் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ,60 கோடி செலவில் கேன்சர் கேர் யூனிட் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இருதய நோய்க்கு அடுத்தபடியாக வரக்கூடிய நோய் என்பது புற்றுநோயாக இருக்கிறது. அதற்கு, மனிதனுடைய உணவு, பழக்க வழக்கங்கள், உடல் பருமன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை காரணங்களாகும். இந்த கேன்சர் என்கிற புற்றுநோய் கடந்த காலத்தில் கொடிய நோயாக இருந்தாலும், இன்றைக்கு மனிதர்களை பாதிக்கக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

புற்றுநோயிலிருந்து மக்களை மீட்டெடுக்கக்கூடிய வகையிலும், அதேபோல பிறந்த குழந்தைக்குக்கூட புற்றுநோயை கண்டறியக்கூடிய தேவை இன்றைக்கு இருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புற்றுநோய்க்கு தேவையான சிகிச்சை வழங்கக்கூடிய முயற்சி எடுத்து இருப்பதும், அதேபோல நம்முடைய சாதனையாளராக திகழ்ந்த மரியாதைக்குரிய நினைவில் வாழும் ஐயா அப்துல் கலாம் நினைவாக இந்தத் திட்டத்தை இங்கே தொடங்கி இருப்பதும் உள்ளபடியே பாராட்டுக்குரியதாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன் என்றால், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் செய்தித் துறை சார்பில் விரைவில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில், மரியாதைக்குரிய அப்துல் கலாம் அவர்களுடைய திருவுருவச் சிலை அமைக்கப்படவிருக்கிறது.

அப்துல் கலாம் அவர்களின் சாதனைகள் போல இந்தத் திட்டம் மக்களுக்கு பயன்பட்டு, புற்றுநோய் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாக்கக் கூடிய வகையில் தென்னிந்தியாவிலேயே ஒரு சிறப்பு மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என இந்த நேரத்தில் தெரிவித்து, அப்பல்லோ நிர்வாகத்திற்கு என்னுடைய வாழ்த்துகளையும், வாய்ப்புக்கும் நன்றியும் கூறி நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.” என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஏ,பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குரூப் ஆன்காலஜி மற்றும் இன்டர்நேஷனல் இயக்குநர்-ஆபரேஷன்ஸ் ஹர்ஷத் ரெட்டி, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஹரிஷ் திரிவேதி, மருத்துவ இயக்குநர் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறைத் தலைவர் மரு.ராகேஷ் ஜலாலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : Abdul Kalam Thiruvuruwa ,Anna University Campus ,News Minister ,Saminathan , A statue of Abdul Kalam will be erected near the Anna University campus: Information Minister Saminathan
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில்...