×

ஆதாரமற்ற தகவலைகளை நம்ப வேண்டாம்.! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமற்ற தகவலைகளை நம்ப வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு TV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது.

இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நட்த்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வாணையத்தின் கடுமந்தணத்தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டும், எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங்காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது.

விடைத்தாட்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி, தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது. கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும், இம்முறை விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 36 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளமை கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது. ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.

மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத்தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எவ்வித தவறுக்கும் இடம்தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : DNPSC Group 4 , Don't believe baseless information.! Official notification that TNPSC Group 4 exam results will be released in March
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2 ஏ...