×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்.! இன்று மாலை கே.எஸ்.அழகிரி வாக்கு சேகரிக்கிறார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக தேர்தல் பணிக்குழுவில் உள்ள 32 திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். தினமும் மாலையில் தங்களது பிரசாரத்தை துவக்கும் அமைச்சர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி, தொகுதிக்கு உள்பட்ட வீரப்பன் சத்திரம், அசோகபுரம், ராஜாஜிபுரம், கிருஷ்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதாவது வழக்கமான பிரசாரமாக இல்லாமல் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு பிரசார யுக்தியை கையாண்டு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அசோகபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி, பொதுமக்களை நோக்கி கும்பிட்டவாறே வீதி வீதியாக ஓடி சென்று வாக்கு சேகரித்தார். அதேபோல, பல இடங்களில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும், பிரசாரத்தின்போது வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகளையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டும் அவர்களுடன் எளிமையாக பேசி, பழகி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வாக்காளர்களை ஈர்த்து வருகிறார். இதேபோல, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி, கற்பக விநாயகர் கோயில் வீதி, மாரியம்மன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, ‘கை’ சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழக அரசின் 20 மாத சாதனைகளை பட்டியலிட்ட துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், கிருஷ்ணம்பாளையம் சாலையில் உள்ள டீ கடை ஒன்றுக்கு சென்ற அமைச்சர் சி.வி.கணேசன், மக்களுக்கு டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலும், அதே பகுதியில் இருந்த ஓட்டல் ஒன்றில் பரோட்டா தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் தவில் வாசித்தும், அமைச்சர் சு.முத்துசாமி பூ வியாபாரம் செய்தும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களின் இந்த கவன ஈர்ப்பு யுக்தி பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. திமுக அமைச்சர்கள் களப்பணியில் கலக்கி வரும் நிலையில், கூட்டணியில் அங்கம் வகித்து இத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர்களது வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு பெரியசேமூரில் தனது பிரசாரத்தை தொடங்கும் அவர், அக்ரஹாரம், சூளை, வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம் உள்பட தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

இதே போல காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு இன்று மாலை 5 மணிக்கு கருங்கல்பாளையம் இந்திரா நகரில் தனது பிரசாரத்தை துவங்குகிறார். தொடர்ந்து, நாளை (15ம் தேதி) இரவு வீரப்பன் சத்திரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பொதுமக்களிடையே பேசுகிறார். மேலும், இக்கூட்டத்தில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுகின்றனர். தவிர, நாளை மாலை 5 மணிக்கு மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தொகுதிக்கு உட்பட்ட கள்ளுக்கடை மேடு, கருங்கல்பாளையம், மரப்பாலம், இந்திரா நகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, வரும் 18ம் தேதி இரவு 7 மணிக்கு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் திருநகர் காலனி தபால் நிலையம் அருகே நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Tags : Erode Eastern Constituency Inter-Election ,K. S.S. Avalakiri , Erode East Constituency By-election: Political party leaders actively campaign in support of candidates. KS Alagiri will collect votes this evening
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...