×

இளம்பெண் கிருத்திகாவே குற்றவாளியாக இருக்க வாய்ப்பு: ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு..!

மதுரை: குஜராத் இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம், கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘‘இலஞ்சியைச் சேர்ந்த கிருத்திகா படேலை காதலித்து, கடந்த ஜன. 20ல் திருமணம் செய்து கொண்டேன். ஜன. 25ம் தேதி அவரது பெற்றோர் என்னை தாக்கி கிருத்திகாவை கடத்திச் சென்று விட்டனர். கிருத்திகாவை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆஜர்படுத்தப்பட்ட கிருத்திகாவை குற்றாலம் நன்னகரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து வாக்குமூலம் பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதன்படி கிருத்திகா, கடந்த 11ம் தேதி செங்கோட்டை மாஜிஸ்திரேட் முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டிடம் கிருத்திகா அளித்த வாக்குமூலம் சீலிடப்பட்ட  கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அரசு கூடுதல் வக்கீல் மீனாட்சிசுந்தரம், ‘‘மாஜிஸ்திரேட்டிடம் தன்னை யாரும் கடத்தவில்லை. தாமாக விரும்பி குஜராத் சென்றதாக கிருத்திகா தெரிவித்துள்ளார். அவருக்கு இரு திருமணங்கள் நடந்துள்ளது’’ என்றார்.

இதையடுத்து  நீதிபதிகள், ‘‘கிருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும். தென்காசியிலுள்ள அவரது தாத்தா, பாட்டியிடம் ஒப்படைப்பது குறித்து அவர்கள் தரப்பில் அபிடவிட் தாக்கலாம்’’ என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தனர். இதனிடையே இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் கோரி அவரது பெற்றோர், உறவினர்கள் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த போது; வழக்கில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் யாருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை வாதிட்டது.

இளம்பெண் கிருத்திகாவே குற்றவாளியாக இருக்க வாய்ப்பு உள்ளதால் விசாரணைக்கு அவகாசம் தேவை. இளம்பெண்ணை கடத்திய போது சினிமா காட்சிகளை போல அடுத்தடுத்து 5 கார்களில் கேரளா சென்றுள்ளனர். அடுத்தடுத்து 5 கார்களை மாற்றிக் கொண்டு கேரளாவில் இருந்து குஜராத் சென்றுள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Teen ,Krithika , The young Krithika is likely to be the culprit: Police opposes granting bail..!
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது