உடுமலை பகுதியில் காணப்படும் பழமையான கல் திட்டைகள்

* வரலாற்று ஆய்வு நடுவத்தினர் விளக்கம்

உடுமலை : தென்கொங்கு நாடு ஈராயிரம் ஆண்டு காலத்திற்கு முற்பட்டவை என்பதற்கான இலக்கிய சான்றுகளும், தொன்ம சான்றுகளும் இன்னும் இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து மண்சார்ந்த பணிகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வீரநாராயண பெருவழி, மற்றும் கொங்க பெருவழி என்னும் பெருவழி பகுதிகளில் ஈராயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பே  மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருந்துள்ளன. ஏற்கனவே கோட்டமங்கலம், நீலம்பூர், மெட்ராத்தி போன்ற இடங்களில் கல் திட்டைகள் இருந்துள்ளன.

மேலும், பாலக்காட்டு கணவாய் என்னும் ஆனைமலை வழியாக செல்லும்  பெருவழியான பெரிய பாப்பனூத்து கெண்டு காட்டம்மன் கோயிலுக்கு அருகில் 6/6, 5/4.5, 4.20/4.10, 6/5 என்ற மிகப்பெரிய அளவிலான பாறைக்கற்களும், 4.5/3.5 எனும் அளவில் சிதிலமடைந்த இடுதுளை உள்ள பாறைகளும் காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி 4.5/1.5, 5/2, 4.5/1.5 போன்ற சிறு அளவு கற்களும் அதில் ஒரு கல்லில் தமிழி எழுத்தில் கல்வெட்டு எழுத்துகளும் காணப்படுகிறது.

இது பிற்காலத்தில் 15, 16ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட  இறையிலி நிலங்கள் கோயிலுக்கு எழுதி வைத்ததற்கான கல்வெட்டு சான்றுகளாக இருக்கலாம் என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர் முனைவர் மதியழகன், ஜெ.கிருஷ்ணாபுரம் மேல்நிலைப்பள்ளி வரலாற்று முதுகலை ஆசிரியர் செ.ராபின், பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி புவியியல் பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, பெரியபாப்பனூத்துக்கு அருகில் கெடிமேடு பகுதியில் புதிர் நிலைக்கற்கள் இருப்பதையும், பெரிய பாப்பனூத்து பகுதியில் கல்திட்டை இருப்பதையும் ஒப்பிட்டு இது பெருவழியாக இருந்ததற்கான சான்றுகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். உடுமலை அருகே பெரிய பாப்பனூத்து பகுதி கெண்டு காட்டம்மன் கோயிலுக்கு கலங்கல், காட்டவநாயக்கன் வலசு, ராஜாவூர், வடகரை, செங்குட்டை, போடிபட்டி போன்ற பகுதி மக்கள் வழிபட்டு செல்வதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கல் திட்டை சிதிலமடைந்தும், இடுதுளை கற்கள் உடைந்தும் இருப்பதையும் வைத்து காலத்தால் முற்பட்ட கல் திட்டையாக கருதலாம்.

என்றாலும், இதனருகே இருக்கும் கல்வெட்டு எழுத்துகள் அப்பகுதி கோயில் சார்ந்து இருப்பதாகவும் கொள்ளலாம். மேலும், தெலுங்கில் கெண்டு என்றால் சேவல், கோழிகளை குறிப்பதாகவும், மேய்ச்சல் நிலங்களில்  ஆடு,மாடுகளையும் கோழிகள், சேவல்களையும் தன்னுடைய சொத்துகளாக கருதி வளர்த்ததையும் கால்நடைகளுக்காக கல்வெட்டுகளையும் நினைவு நடுகற்கள் வைத்து வழிபட்டதையும் மாலகோயில் வழியாக ஏற்கனவே உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் பதிவு செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Related Stories: